×

திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

*பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த பேரணி நேற்று நடந்தது. இதில், ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தகவல் அறியும் உரிமை சட்டம்- 2005 விழிப்புணர்வு வாரம் கடந்த 5ம் தேதி முதல் வரும் 12ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வருவாய்த்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. செங்கம் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் முருகன் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

பேரணி புதிய பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், துணை தாசில்தார்கள் துரைராஜ், தமிழரசி, வருவாய் ஆய்வாளர் வடிவேலு, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை தாசில்தார் அப்துல் ரகூப் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக பஸ் நிலையம் வரை சென்று மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், மண்டல தாசில்தார் மோகனராமன், வருவாய் ஆய்வாளர் சத்தியநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்யாறு: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் பகுதியில் நடந்த தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் மூ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியில் தலைமை இடத்து துணை தாசில்தார் ஆர்.தேவராஜன், மண்டல துணை தாசில்தார் காயத்ரி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

வந்தவாசி: வந்தவாசியில் வருவாய்த்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை தாசில்தார் இரா.பொன்னுசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் தனியார் மகளிர் கல்லூரியை சேர்ந்த 200 மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பேரணி பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது.

இதில், வருவாய் ஆய்வாளர்கள் வெங்கடேசன், சோமசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை தாசில்தார் வெங்கடேசன் துவக்கி வைத்தார். பேரணியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் மண்டல தாசில்தார் காஜா, தேர்தல் பிரிவு தாசில்தார் கோமதி, வருவாய் ஆய்வாளர்கள, கிராம நிர்வாக அதிகாரிகள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், வருவாய்த்துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Right to Information Act Awareness Rally ,Thiruvannamalai District ,Thiruvannamalai ,Right to Information ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகம் முன் முதியவர்...