×

தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கம்

*கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தெரிவித்தனர். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தை கடந்த 8ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இதை தொடர்ந்து இங்கிருந்து பேருந்துகள் இயக்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.58.67 கோடி மதிப்பீட்டில் அண்ணா பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மாநகராட்சி, காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பேருந்து நிலையத்தில் பயணிகள் வந்து போவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக தரைத்தளத்தில் 29 பேருந்துகள் நிறுத்தும் இடங்கள், 36 கடைகள், கூடுதல் வசதியாக பேருந்து கட்டுப்பாட்டு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, மின் கட்டுப்பாட்டு அறை, குடிநீர் சுத்திகரிப்பு அறை, சுகாதார அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது.

பேருந்துகள் செல்லும் இடம், நேரம் உள்ளிட்ட பயணிகளின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டு அறையில் அலுவலர் இருப்பார். பயணிகளுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவரிடம் சென்று கேட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு தளத்திலும் நவீன வசதிகளுடன் கொண்ட கழிப்பறைகள் உள்ளன. முதல் தளத்தில் 43 கடைகளும், 384 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் உள்ளன. 2ம் தளத்தில் 19 கடைகளும், 45 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் உள்ளது.

3ம் தளத்தில் 17 கடைகள், 4ம் தளத்தில் உணவகம் மற்றும் இதர பயன்பாட்டிற்கான வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் வசதிக்காக 2 லிப்ட் வசதிகளும் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதள வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகளை இறக்கிச் செல்ல ஆட்டோக்களுக்கு தனியாக வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்படும்.

ஏற்கனவே திருச்செந்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். சென்னை, மதுரை உள்ளிட்ட வெளியூர் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வழக்கம்போல இயங்கும். மேலும், இங்கு வேறு தேவைகள் இருந்தாலும் தொடர்ந்து சரிசெய்யப்படும். மினி பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். ஏதேனும் தேவைகள் இருக்கும்பட்சத்தில் பயணிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துக்கோ, மாநகராட்சிக்கோ தெரிவித்தால் உடனடியாக சரிசெய்யப்படும், என்றனர்.

ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் வீருகாத்தான், துணை மேலாளர் அழகிரிசாமி, பேருந்து நிலைய உதவி மேலாளர் ஏ.எம்.சாமி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன், திமுக பகுதி செயலர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

The post தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Buses ,Anna Bus Station ,Thoothukudi ,Collector ,Senthilraj ,Mayor ,Jaganperiyaswamy ,Tuticorin ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...