×

கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்… 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!!

தஞ்சை : காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா பாசன மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் கர்நாடகம் திறந்து விட வேண்டிய தண்ணீரை தர மறுத்ததாலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. பருவமழை காலங்களில் 41 ஆண்டுகளுக்கு பிறகு நீர் இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 500 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தை விட டெல்டா பாசனத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 30.9 அடியாக குறைந்துள்ளது. இதனிடையே காவிரியில் நீர் வரத்து குறைந்ததால் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன.

இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளன. திருவாவூர் மாவட்டத்தில் 30,000த்திற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 4,000த்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.கடை அடைப்பு போராட்டத்தால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டம், பேரணி நடத்த உள்ளதாக வணிகர்கள் அறிவித்துள்ளனர்.இந்த போராட்டம் காரணமாக நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

The post கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம்… 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு!! appeared first on Dinakaran.

Tags : KARNATAKA GOVERNMENT ,DELTA ,Tanjay ,Tamil Nadu ,Kaviri ,
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...