×

இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு பழநியில் அரசு பஸ் ஜப்தி

பழநி, அக். 11: பழநி அருகே ஆயக்குடியைச் சேர்ந்தவர் அம்மாபாட்டி மனைவி முனியம்மாள் (60). கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சந்தைப்பேட்டை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பழநியில் இருந்து மதுரை சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது லாரி ஒன்று மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ் நடந்து சென்று கொண்டிருந்த முனியம்மாளின் மீது மோதியது.

இதில் முனியம்மாள் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக முனியம்மாள் தரப்பில் இழப்பீடு கேட்டு பழநி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2020ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் லாரியின் உரிமையாளர் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் என இரு தரப்பும் தலா 1.93 லட்சம் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. லாரி தரப்பில் இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கி விட்டது.

போக்குவரத்துக் கழகம் தரப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக முனியம்மாள் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சார்பு நீதிபதி ஜெயசுதாகர் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்அடிப்படையில் நேற்று பழநி பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

The post இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு பழநியில் அரசு பஸ் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Palani ,Muniyammal ,Ayakudi ,Dinakaran ,
× RELATED ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார்...