×

உறுப்பு கல்லூரிகளுக்கு 351 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய வேண்டும்: அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் 2010-11ம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது என்றும் அந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 3 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?. 425 காலியிடங்களுடன் எப்படி செயல்படுகிறது என்று விளக்கமளிக்குமாறு பல்கலைகழக பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைகழக பதிவாளர் தரப்பில், தாக்கல் செய்த அறிக்கையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழும விதிகளின்படி, பல்கலைக்கழகத்தின் 16 உறுப்பு கல்லூரிகளிலும் 835 உதவி பேராசிரியர்கள், 224 இணை பேராசிரியர்கள், 99 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 484 உதவி பேராசிரியர்கள், 15 இணை பேராசிரியர்கள், 5 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள 351 இடங்களை நேரடி தேர்வு முலம் நிரப்ப தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த 351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வரைவு அறிவிப்பாணையை பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post உறுப்பு கல்லூரிகளுக்கு 351 உதவி பேராசிரியர்களை நியமிக்கும் வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய வேண்டும்: அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Anna University Chennai ,Anna University ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...