×

என் மண் என் நாடு என்ற பெயரில் மண் சேகரிப்பு நிகழ்ச்சி: அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் பங்கேற்பு

திருவொற்றியூர்: புதுவண்ணாரப்பேட்டை துறைமுகம் குடியிருப்பு பகுதியில் உள்ள துறைமுக விளையாட்டு மைதானத்தில், ‘என் மண் என் நாடு’ என்ற பெயரில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் இருந்து மண் சேகரித்து டெல்லிக்கு அனுப்பும் நிகழ்ச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை அஞ்சலக அதிகாரி அமுதா, எஸ்பிஐ வங்கியின் தலைமை மேலாளர் ராதாகிருஷ்ணன், துறைமுகம் முன்னாள் பிஆர்ஓ ஜெயசூர்யா, மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டர் ஷேக் ஜாபர், நேரு யுவகேந்திர சங்க துணை இயக்குநர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.  இதில் அஞ்சல் துறை ஊழியர்கள், எஸ்பிஐ வங்கி ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர் என 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களை 3ஆக பிரித்து அந்தந்த பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை குடும்பத்தினர், அஞ்சலக ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் சேகரித்த மண்ணை, பானையில் வைத்து 3 குழுக்கள் கொண்டுவந்து சேர்த்தனர்.

இன்னும் 10 மண்டலங்களில் சேகரிக்கப்படும் மணலை மொத்தமாக டெல்லிக்கு அனுப்ப உள்ளனர். மேலும், நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக ஒவ்வொரு படை வீரர்களும், நாட்டுக்காக தாங்கள் எவ்வாறு போராடுகிறோம் என்பதை குறிக்கும் விதமாக, ‘என் மண் என் நாடு’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post என் மண் என் நாடு என்ற பெயரில் மண் சேகரிப்பு நிகழ்ச்சி: அரசு ஊழியர்கள், குடும்பத்தினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Puduvannarappet harbor ,
× RELATED திருமணிமுத்தாற்றில் கழிவுகள்...