×

சென்னை எழும்பூர் சிக்னலில் டிராவல்ஸ் மேலாளரிடம் ரூ.30 லட்சம் பறிப்பு: தப்பிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை

பூந்தமல்லி: எழும்பூர் சிக்னலில் பைக்கில் நின்று கொண்டிருந்த டிராவல்ஸ் நிறுவன மேலாளரை, பொதுமக்கள் முன்னிலையில் 3 பேர் கொண்ட கும்பல், கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சத்தை பறித்து சென்றனர். 2 தனிப்படை அமைத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43). இவர், சென்னை நெற்குன்றம் ஜெயராம் நகர் 1வது மெயின் ரோடு பகுதியில், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது உறவினரான சிவகங்கையை சேர்ந்த பெரியய்யா, கோயம்பேடு மார்க்கெட்டில் பி.கே.எஸ் மொபைல் ஷாப் மற்றும் மணி என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் சக்திவேல் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த டிராவல்ஸ் நிறுவனம் மற்றும் செல்போன் கடையில் வசூலாகும் பணத்தை மொத்தமாக சக்திவேல் தான் வங்கிக்கு எடுத்து சென்று டெபாசிட் செய்வது வழக்கம். அதன்படி, கடந்த 7ம் தேதி இரவு கோயம்பேடு அலுவலகத்தில் இருந்து ரூ.28 லட்சத்தை சக்திவேலிடம் கொடுத்த பெரியய்யா, மறுநாள் காலை, இந்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யும்படி கூறியுள்ளார். மேலும், இந்த பணத்துடன், பாரிமுனையில் ஒருவர் தர வேண்டிய ரூ.2 லட்சத்தையும் பெற்று, அதையும் சேர்த்து வங்கியில் செலுத்தும்படி பெரியய்யா கூறியுள்ளார்.

அதன்படி, சக்திவேல் அந்த ரூ.2 லட்சத்தையும் பெற்றுக் கொண்டு, மொத்தமாக ரூ.30 லட்சத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இரவு 8.25 மணிக்கு, எழும்பூர் ஆன்ட்ரோ சர்ச் அருகே ஈவெரா சாலையில் உள்ள சிக்னலில், சக்திவேல் பைக்குடன் நின்று கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த 3 பேர், கத்தி முனையில் சக்திவேலை வழிமறித்து, அவர் வைத்திருந்த ரூ.30 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத சக்திவேல், தனது பைக்கில் பணத்தை பறித்து சென்ற 3 பேரை பின்னால் துரத்தி சென்றார்.

அப்போது, 3 பேரும் கத்தியை காட்டி ‘எங்களை பின் தொடர்ந்தால் உன்னை கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டி, கையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். உயிருக்கு பயந்த சக்திவேல், அதன் பிறகு அவர்களை பின்தொடரவில்லை. பின்னர் நடந்த சம்பவத்தை தனது நிறுவனத்தின் உரிமையாளரான பெரியய்யாவுக்கு தெரிவித்துள்ளார்.

பின்னர், இதுதொடர்பாக நேற்று முன்தினம் எழும்பூர் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் ரூ.30 லட்சத்துடன் தப்பி ஓடிய 3 பேரை, 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். அதேநேரம், பணம் கொள்ளையடிக்கப்பட்டு ஒரு நாட்கள் கழித்து சக்திவேல் புகார் அளித்தது தொடர்பாக சக்திவேலிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை எழும்பூர் சிக்னலில் டிராவல்ஸ் மேலாளரிடம் ரூ.30 லட்சம் பறிப்பு: தப்பிய 3 பேரை பிடிக்க 2 தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Alumpur ,Signal ,Chennai ,Poontamalli ,Alumpur Signal ,Dinakaraan ,
× RELATED காரைக்கால் என்.ஐ.டியில் மருத்துவ...