×

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசில் பரபரப்பு அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா: சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கவர்னருக்கு உருக்கமான கடிதம்

புதுச்சேரி: புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர், கவர்னருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக குறிப்பிட்டுள்ளார். புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரசில் 3 பேரும், பாஜவில் 2 பேரும் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்ட சந்திரபிரியங்கா போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால் அவரது செயல்பாடுகள் மீது முதல்வர் ரங்கசாமி அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் எந்த நேரத்திலும் அவரது பதவி பறிக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

கடந்த 9ம் தேதி இரவு துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்த ரங்கசாமி, அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தன் கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி அமைச்சர் சந்திரபிரியங்காவின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று மதியம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னர் தமிழிசைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ஒரு சட்டமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக என் பணியை மனத்திருப்தியுடனும், மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வரும் நிலையில் என்னைச்சுற்றி அரசியல் சூழ்ச்சி வலைகள் பின்னப்பட்டுள்ளதாக உணர்ந்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால், கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளது. இதனை பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வரும் நான், மக்கள் செல்வாக்கு மூலம் சட்டமன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல்போனது.

தொடர்ந்து சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதலும் பெண்கள் வாய்மூடியாக மவுனித்து அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென தொடர்ந்து குறிவைக்கப்படுகிறேன். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாத நிலையில் எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியை தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன். கண் மூடித்தனமாக அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில் என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள் செய்துள்ளேன் என்பதை விரைவில் பட்டியலாக சமர்ப்பிக்கிறேன் என உறுதியளித்து முடிக்கிறேன். உடனே எனது ராஜினாமாவை ஏற்று, போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சொந்த பிரச்னையில் ஆணாதிக்கமா?

ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து தொகுதி மக்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா 2 பக்க கடிதத்தை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என்னைச்சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். சொந்தப் பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையில் எடுத்து காய் நகர்த்துதல் நாகரிகமல்ல. ஆனால் தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா? என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மக்களுக்குதான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். இப்பதவியை கொடுத்த முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இருகரம் கூப்பி தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக பெண்களுக்கான முன்னுரிமை அதிகாரத்தில் பங்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்ளவும் விரும்புகிறேன். நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

* வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்: முதல்வருக்கு வேண்டுகோள்

‘முதல்வருக்கு எனது ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர் மற்றும் தலித். இச்சமூகங்களில் இருந்து வந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதி செய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயம் செய்ய வேண்டும். மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிரினாலும், அதிகார மட்டத்தில் உள்ள செல்வாக்கினாலும் பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இப்பதவியை கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்’ என்று தொகுதி மக்களுக்கு எழுதிய கடித்ததில் அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்து உள்ளார்.

* ரங்கசாமி மனசில் யார்? 3 பேர் கடும் போட்டி

என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த ஒரே பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அந்த பதவிக்கு அக்கட்சியில் இருந்து தான் அமைச்சர் பதவி நிரப்பப்பட வேண்டும். இதற்காக முதல்வர் ரங்கசாமி, கட்சியின் முன்னோடி நிர்வாகிகளிடம் ஆலோனை நடத்தி வருகிறார். ராஜினாமா செய்துள்ள சந்திர பிரியங்கா ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். தற்போது துணை சபாநாயகராக உள்ள ராஜவேலு, ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அப்பதவி வழங்கப்படலாம். கடந்த முறை ரங்கசாமி முதல்வராக இருந்தபோது ராஜவேலு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

அதன்அடிப்படையில் அவருக்கு முன்னுரிமை உள்ளது. ஆனால் ராஜவேலு உடல் நிலை தற்போது சரியில்லாததால் அவரது அண்ணன் மகன் லட்சுமிகாந்தனுக்கு அப்பதவி வழங்கப்படலாம். இவர் தொகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் எளிமையாக பழகக்கூடியவர் என்பதால் இவருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் காரைக்காலுக்கு பிரதிநிதித்துவம் கொடுப்பதில் ரங்கசாமி முன்னுரிமை கொடுப்பார். அங்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதால் மூன்று முறை வெற்றி பெற்ற திருமுருகன் அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். ஆனால் யார் கணக்கு எப்படி இருந்தாலும் ரங்கசாமி ஏற்கனவே தனது மனசில் தனி முடிச்சு போட்டு வைத்து இருப்பார். அவர் நேரம் பார்த்து அதனை வெளியிடுவார் என்று அவரது நெருங்கிய வட்டாரம் கூறுகிறது.

The post புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசில் பரபரப்பு அமைச்சர் சந்திர பிரியங்கா திடீர் ராஜினாமா: சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக கவர்னருக்கு உருக்கமான கடிதம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,NR Cong-Baj ,minister ,Chandra Priyanka ,Chandrapriyanka ,Puducherry NR Congress-Baj ,coalition minister ,
× RELATED பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்