×

சதுரகிரியில் தங்கி வழிபாடு செய்ய அனுமதி கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

திருவில்லிபுத்தூர்: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே, ஆனந்த வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை, சுந்தரபாண்டியம், சாத்தூர், புனல்வேலி, சக்கம்பட்டி மற்றும் ராஜபாளையம் ஆகிய ஊர்களில் வசிக்கும் ஒரு சமூகத்தினர் ஆனந்தவள்ளியம்மனை குலதெய்வமாக கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் நவராத்திரி சமயங்களில் இந்த சமூகத்தினர் சதுரகிரி கோயிலில் தங்கி வழிபாடு செய்வது வழக்கம். இதன்படி இந்தாண்டு வரும் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் சதுரகிரியில் தங்கி வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த ஆண்டு நவராத்திரி விழாவின்போது சதுரகிரி மலையில் தங்கி சாமி தரிசனம் செய்வதற்கும் விழா கொண்டாடுவதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக வத்திராயிருப்பு வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் தீர்வு எதுவும் ஏற்படவில்லை. இதனால், சுந்தரபாண்டியத்தில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ‘சதுரகிரி மலையில் தங்கி சாமி தரிசனம் செய்ய எங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக சுந்தரபாண்டியம் பகுதியில் உள்ள எங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 200 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

The post சதுரகிரியில் தங்கி வழிபாடு செய்ய அனுமதி கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Chaturagiri ,Chathuragiri Sundaramakalingam ,Western Ghats ,Chaptur, Madurai district ,Ananda ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...