×

மண்டபம் கடற்பகுதியில் இலங்கை படகு ஊடுருவல்: மாயமான 2 பேரை தேடும் போலீசார்

ராமேஸ்வரம்: மண்டபம் கடலோரப் பகுதியில் ஊடுருவிய இலங்கை படகு குறித்து மரைன் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், படகில் வந்து மாயமான இருவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ‘சாஹர் கவாச்’ என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை இன்று அதிகாலை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே, மண்டபம் முணைக்காடு கடற்கரை பகுதிக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் இலங்கையைச் சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒன்று வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டபம் மரைன் போலீசார் படகை மீட்டு சோதனை செய்தனர். படகில் இன்ஜின், டீசல் கேன், பெட்டியில் சிறிது மீன்கள் இருந்தன.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ‘கைப்பற்றப்பட்ட இலங்கை படகு இன்று அதிகாலை ராமேஸ்வரம் ஓலைக்குடா நரிக்குழி பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் வழியாக மண்டபம் கடல்பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இது இலங்கை பள்ளிமுனையை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான படகு என்பதும், படகில் வந்த இருவர் கடற்கரையோரத்தில் இருக்கும் முள் காட்டுக்குள் சென்று தலைமறைவானதும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும், படகில் வந்து இறங்கியவர்கள் யார், என்ன பொருட்களை கடத்தி வந்தார்கள், உச்சிப்புளி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட மருந்து, மாத்திரைகளை கடத்தி செல்ல வந்தார்களா என்பது குறித்தும் ஒன்றிய, மாநில புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post மண்டபம் கடற்பகுதியில் இலங்கை படகு ஊடுருவல்: மாயமான 2 பேரை தேடும் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Rameswaram ,
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தி அமைக்கும் பணி தீவிரம்