×

ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு சதவீதம் திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிக்கு செலவிடப்படும்

*அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை : ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு சதவீதம் திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிக்கு செலவிடப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அவர் பேசியதாவது:
அலிபிரியில் உள்ள சப்த கோ பிரதட்சன மந்திரில் அருகே தினமும் நிவாச திவ்ய அனுக்கிரக சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. பக்தர்கள் தங்கள் பெயர், கோத்திரம் கூறி யாகத்தில் பங்கேற்கலாம். இந்த யாகத்திற்கான கட்டணம் விரைவில் முடிவு செய்யப்படும்.

தேவஸ்தான தூய்மை பணியாளர்களின் ஊதியம் ₹12 ஆயிரத்தில் இருந்து ₹17 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக அவர்களின் ஊதியத்தை இனி ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் உயர்த்தப்படும். இதனால், 6,600 பணியாளர்கள் பயனடைவார்கள். அக்டோபர் மாதம் முதல் இதனை செயல்படுத்தப்படும். ஊழியர்கள் அகால மரணம் அடைந்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சுகாதார திட்டத்தில் தேவஸ்தானத்தின்கீழ் உள்ள மருத்துவமனைகள் மூலம் ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்களை தனது மெல்லிசை குரல் மூலம் பிரபலப்படுத்திய தேவஸ்தான ஆஸ்தான இசை கலைஞர் கரிமெல்ல பாலகிருஷ்ண பிரசாத்துக்கு பத்ம விருது அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட உள்ளது. திருமலையில் கோகர்பம் அணை சந்திப்பு வெளிவட்ட சாலையில் முறையான வசதியின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களுக்காக நாராயணகிரி ஓய்வறை சந்திப்பு முதல் ஆழ்வார் டேங்க் ரோடு சந்திப்பு வரை ₹18 கோடியில் நிரந்தர வரிசைகள், உணவு கவுன்டர்கள், கழிப்பறைகள் மற்றும் 2 நடை மேம்பாலங்கள் கட்டப்படும். திருமலை முதல் மலைப்பாதை சாலையில் லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் இருந்து முழங்கால் படி வரை சாலையோரம் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு வெயில், மழை காலத்தில் பாதிக்காத வகையில் ₹2.81 கோடியில் நடைபாதை, நிழற்குடைகள் அமைக்கப்படும்.

பக்தர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் நோக்கத்தில் ஆந்திர பிரதேஷ சுற்றுலாத்துறை சார்பில் திருமலையில் அன்னமய்யா கட்டிடம் மற்றும் நாராயணகிரி உணவகங்களில் பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்க கேன்டீனை நடத்த வழங்கப்பட்டுள்ளது. காட்டேஜ் நன்கொடை திட்டத்தின்கீழ் திருமலையில் 63 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காயத்ரி சதன், வாரி குட்டிர், டிபிசி-53, டிபிசி-64 போன்ற 13 ஓய்வு இல்லங்களை புனரமைத்து தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.

ஒரு காலத்தில் திருப்பதி நகரம் கிராமமாக இருந்த ஏழுமலையான் அருளால் நகரமாக வளர்ந்தது. தொலைதூர இடங்களிலிருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு உத்தரவுப்படி திருப்பதியில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பொறுப்பை தேவஸ்தானமே ஏற்றுக்கொண்டு பராமரிக்கும். இங்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள், பக்தர்கள் பயன்படுத்தும் சாலைகள் உள்ளது. இப்பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, துப்புரவு மேலாண்மை பொறுப்பை தேவஸ்தானமே ஏற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தனியார் நிறுவனங்களும் கார்ப்பரேட் சமூக பொறுப்பாக வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. திருப்பதி நகரை மேம்படுத்தும் பொறுப்பு தேவஸ்தானத்திற்கு உள்ளது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் திருப்பதியின் வளர்ச்சிக்காக தேவஸ்தானத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை திருப்பதி மாநகராட்சிக்கு வளர்ச்சிக்கு செலவிடப்படும். செர்லோப்பள்ளியிலிருந்து சீனிவாசமங்காபுரம் மற்றும் வாரிமெட்டு வழியாக திருமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 2010ம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது.

தற்போது ​​செர்லோப்பள்ளியில் இருந்து சீனிவாசமங்காபுரம் செல்லும் சாலையில் பக்தர்கள் செல்வது அதிகரித்துள்ளதால் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். தெருவிளக்குகள், அழகுப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள ₹25 கோடியில் அமைக்கப்படும். தேவஸ்தான பள்ளிகளில் படிக்கும் 3,259 மாணவர்களுக்கு தரமான மற்றும் சுவையான சத்தான உணவை வழங்க 2023-24ம் கல்வியாண்டு முதல் மதிய உணவை வழங்குகிறது.

முன்னதாக இஸ்கான் அமைப்பு மதிய உணவை வழங்குவதை நிறுத்தப்பட்டது. பின்னர், அருகிலுள்ள கல்லூரிகளின் விடுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு மதிய உணவை சப்ளை செய்கிறது. இதில் சாதம், சாம்பார், கறி, ரசம், சட்னி, தயிர் அல்லது மோர் ஆகியவற்றை மெனுவாக தரம் உயர்த்தி வழங்க முடிவு செய்து இதற்காக ஆண்டுக்கு ₹2.63 கோடிக்கு மேல் செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் தலைமை செயல் அதிகாரி தர்மா, இந்து அறநிலையத்துறை செயலாளர் கரிகாலவளவன், ஆணையர் சத்தியநாராயணா, இணை செயல் அதிகாரிகள் சதா பார்கவி, வீரபிரம்மம் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கோபுரங்களின் வலிமையை சரிபார்க்க ஐஐடி நிபுணர்கள் குழுதிருமலையில் உள்ள வராஹசுவாமி ஓய்வறையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகன போக்குவரத்தை முழுவதுமாக மாற்றும் வகையில் ₹10.80 கோடியில் வராக சுவாமி ஓய்வறை முதல் வெளிவட்ட சாலை வரை 4 வழிச்சாலை, நடைபாதை, வடிகால்கள், தெருவிளக்குகள், வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படும். பழமை வாய்ந்த காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்து விழுந்ததையும், சமீபத்தில் ரங்கத்தில் மகா ராஜகோபுரம் பாதிக்கப்பட்டு பெயர்ந்து விழுந்ததை பார்த்தோம்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தேவஸ்தானத்தின் கீழ் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோபுரங்களின் வலிமையை சரிபார்க்க ஐஐடி நிபுணர்களை கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வருங்கால சந்ததியினருக்கு கோயில்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து சீரமைக்கப்படும்.

கோகர்பம் அணைக்கு கீழே சாலைதிருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தம், வேணுகோபால சுவாமி கோயில், ஆகாசகங்கை மற்றும் பாபவினாசனம் செல்லும் வழியில் போக்குவரத்து ஏற்படுகிறது. இதேபோல், அனுமன் பிறந்த அஞ்சனாத்திரியிலும் வளர்ச்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எதிர்க்காலத்தில் இப்பாதையில் போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள இருவழிச்சாலை போதுமானதாக இல்லாததால் ஆகாசகங்கை முதல் வெளிவட்ட சாலை வரை 4 வழிச்சாலையாக ₹40 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும். கோகர்பம் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணைக்கு கீழே சாலை அமைக்கப்பட உள்ளது.

திருமணங்களின்போது ​​பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் திருமணங்களின் போது, ​​சினிமா பாடல்கள் இல்லாமல் பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும் உள்ளிட்ட 21 நிபந்தனைகள் கொண்டு வரப்பட உள்ளது. இதனை ஏற்பவர்களுக்கு மட்டும் வாடகைக்கு வழங்கப்படும். தொலை தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அலிபிரியில் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களை நிறுத்தி விட்டு திருமலைக்கு செல்கின்றனர்.

தற்போது அலிபிரியில் தற்போது 130 வாகனங்கள் நிறுத்த 2.47 ஏக்கர் மட்டுமே இட வசதி உள்ளது. அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாக 156 பேருந்துகள், 683 கார்கள்,ஜீப்புகள், 1,325 பைக்குகள், 7 கூடுதல் கழிப்பறைகள், பக்தர்களுக்கு சமையல் செய்யும் வசதிகள் ஏற்படுத்த 11.34 ஏக்கரில் மூன்று அமைக்கப்படும். இதில் சமையல் செய்யும் வசதி, மின்விளக்கு சர்வ தரிசன டிக்கெட் பெறும் பக்தர்களுக்கான நிரந்தர நிழற்பந்தல் உள்ளிட்டவை ₹21.60 கோடிக்கு அமைக்கப்படும்.

The post ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானத்தின் மொத்த பட்ஜெட்டில் ஒரு சதவீதம் திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிக்கு செலவிடப்படும் appeared first on Dinakaran.

Tags : Devasthanam ,Tirupati Corporation ,Board of Trustees ,Information ,Thirumalai ,Dinakaran ,
× RELATED ரூ.2,000 நோட்டுகளை ஆர்பிஐ-யில் கொடுத்து மாற்றியது திருப்பதி தேவஸ்தானம்..!!