×

நீலகிரி வனக்கோட்டம் சார்பில் 60 ஆயிரம் சில்வர் ஓக் மரக்கன்று வழங்க திட்டம்

ஊட்டி : நீலகிரி வனக்கோட்டம் சார்பில் தமிழ்நாடு உயிர்பன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 60 ஆயிரம் பணப்பயிரான சில்வர் ஓக் மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தோட்ட தொழிலாக தேயிலை விவசாயம் விளங்கி வருகிறது. சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும், 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன. தேயிலை தொழிலை நம்பி மாவட்டம் முழுவதும் சுமார் 60 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.

இவர்கள் தங்களது தேயிலை தோட்டங்களில், ஊடுபயிராகவும், நிழலுக்காகவும் சில்வர் ஓக் மரங்கள் நடவு செய்துள்ளனர். தோட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்கள் விவசாயிகளுக்கு நல்ல வருவாயை தந்து பல பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தி வருகின்றன. சில்வர் ஓக் மரம் ஐந்து ஆண்டுகளில் வளர்ந்து பலன் அளிக்கிறது. மற்ற மரங்கள் குறைந்தது 10 ஆண்டிலிருந்து 20 ஆண்டுகள் வரை பலன் தர கூடியவையாகும். தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், சில்வர் ஓக் மரங்களை விற்பனை செய்து குடும்பங்களை நகர்த்தி வருகின்றனர்.

மேலும், குழந்தைகளின் திருமணம் மற்றும் மேற்படிப்பு போன்ற அத்தியாவசிய தேவையின் போது விற்பனை செய்ய சில்வர் ஓக் மரங்கள், விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. தற்போது, பசுந்தேயிலைக்கு விலை இல்லாத நிலையில் செலவுகளை சமாளிக்க விவசாயிகள், நன்கு வளர்ச்சியடையாத மரங்களை கூட குறைந்த விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால், தேயிலை தோட்டங்களில் சில்வர் ஓக் மரங்களை காண்பதே அரிதாகி விட்டது. சில விவசாயிகள் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் நடவு செய்தாலும், காட்டுமாடு, மான் போன்றவை கடித்து விடுவதால் வளர்ச்சி பாதிக்கிறது.

இதனிடையே, விவசாயிகளுக்கு வனத்துறை சார்பில் தமிழ்நாடு உயிர்பன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் தனியார் பட்டா நிலங்களில் விவசாயிகளுக்கு சில்வர் ஓக் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு 60 ஆயிரம் சில்வர் ஓக் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கௌதம் கூறுகையில்,“நீலகிரி வன கோடடத்தில் தமிழ்நாடு உயிர்ப்பன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 59 ஆயிரத்து 390 எண்ணிக்கை சில்வர் ஓக் நாற்றுகள் விவசாய நிலங்களில் பயிரிட ஒப்பளிப்பு பெறப்பட்டுள்ளது’’ என்றார்.

The post நீலகிரி வனக்கோட்டம் சார்பில் 60 ஆயிரம் சில்வர் ஓக் மரக்கன்று வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri Vanakottam ,
× RELATED கோத்தகிரி அருகே வனத்துறை கூண்டில்...