×

மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் சிறுவர்களுக்கு வலி நிவாரண மாத்திரை விற்பனை செய்த மெடிக்கலுக்கு சீல்

திருப்பூர் : அவிநாசி அருகே மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் சிறுவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த மெடிக்கலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மருந்து கட்டுப்பாட்டு துறை இணை இயக்குநர் ஸ்ரீதர், கோவை மண்டல உதவி இயக்குநர் குருபாரதி ஆகியோர் உத்தரவின்பேரில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வின்போது போலி மருத்துவமனைகள் மற்றும் மெடிக்கல்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதுபோல், போலி டாக்டர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆய்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், அவிநாசி குளத்துப்பாளையம் பகுதியில் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல், வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக, மருந்துகள் ஆய்வாளர் மகாலட்சுமிக்கு புகார் வந்தது. அதன் பேரில் நேற்று அவிநாசி குளத்துப்பாளையத்தில் உள்ள ஸ்டார் மெடிக்கலில் மருந்துகள் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், அவிநாசி எஸ்ஐ லோகநாதன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அந்த மெடிக்கலில் பிலால் என்பவர் இருந்தார். அங்கு மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த மெடிக்கலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இது குறித்து மருந்துகள் ஆய்வாளர் மகாலட்சுமி கூறியதாவது:மருத்துவர் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி செல்கிறவர்கள் அதனை போதைக்காக பயன்படுத்தி வருகிறார்கள். சிறுவர்கள் சிலர் இதனை பயன்படுத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த மெடிக்கலில் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். அதன் பேரில் அங்கு ஆய்வு செய்து முதற்கட்டமாக சீல் வைத்துள்ளோம். மெடிக்கலின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்பின், அடுத்தடுத்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இன்றி மாத்திரைகள் விற்பனை செய்கிற மெடிக்கல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, இதுபோன்ற வலி நிவாரண மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை இன்றி விற்பனை செய்யக்கூடாது. தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும். தவறு செய்யும் மெடிக்கல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் சிறுவர்களுக்கு வலி நிவாரண மாத்திரை விற்பனை செய்த மெடிக்கலுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Avinasi ,
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்