×

தமிழக கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்

நாகை : தமிழ்நாட்டில் கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்தும் சாகர் கவாச் என்னும் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள், போலீசார் உயிரிழந்தனர். இந்நிலையில், கடலோர பாதுகாப்பை அதிகரிக்க தமிழகத்தில் ஆண்டுதோறும் கடற்பகுதியில் ‘சாகர் கவாச்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் இன்று தொடங்கியது.

இதில் கடலோர காவல் படையினரே தீவிரவாதிகள்போல் வேடமணிந்தும், டம்மி குண்டுகளை கொண்டு வருவதும், அவர்களை சக கடலோர காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஒத்திகையில் தமிழக காவல்துறை, கடலோர காவல்படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புதுறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.இங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தமிழக கடற்கரை முழுவதும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நவீன படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன நுண்ணோக்கிகள் மூலம் தொலைதூரத்தையும் கண்காணித்து வருகின்றனர். கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாளம் தெரியாத படகுகள் வந்தால் உடனடியாக தகவல் தரவேண்டும் எனவும் காவல்படையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

The post தமிழக கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sagar Gavach ,Tamil Nadu ,Sagar ,Gavach ,Coastal Security Group Police ,
× RELATED வாழை மர தண்டில் இருந்து கூடை செய்தல் குறித்து செயல் விளக்கம்