×

ஜெர்மனியில் வண்டி ஆர்டர் செய்து வளர்ப்பு நாயுடன் இசிஆரில் வலம் வரும் ஐடி ஊழியர்

மாமல்லபுரம்: சென்னை புறநகர் பகுதியான நாவலூரில் வசித்து வருபவர் ஹரி (51). இவர் ஓஎம்ஆர் சாலையொட்டி துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது, மனைவி சீத்தல் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்து வருகிறார். வளர்ப்பு பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்ட ஹரி தான் குடியிருக்கும் வீட்டில், ‘ரூபி’ என்ற நாயை குட்டியிலிருந்து பாசத்தோடு வளர்த்து வருகிறார். இவர், எங்கு சென்றாலும் ரூபியை கூடவே அழைத்து சென்று விடுவாராம். அவரது, குடும்பத்தினர் ஒரு நாள் கூட ரூபியை விட்டு பிரிந்தது கிடையாதாம். இந்நிலையில், ஹரி வாரத்தில் ஒரு நாள் மாமல்லபுரம் வரை மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் இருந்து இசிஆர் சாலை வழியாக மாமல்லபுரம் வரை சைக்கிளிங் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, அதிகப்படியாக இசிஆர் சாலையில் தனது சைக்கிளில் வரும்போது, ரூபியை பின் பக்க சீட்டில் உட்கார வைத்து அழைத்து வரும் நேரத்தில் எப்போது சாலையில் கீழே விழுந்து விடுமோ என்ற ஒருவித அச்சத்துடன் அழைத்து வந்துள்ளார். இதையடுத்து, தனது செல்லப் பிராணியான ரூபியை பாதுகாப்பாக அழைத்து செல்ல ஒரு வண்டி வாங்க முடிவு செய்தார்.

அதன் பிறகு, ஆன்லைனில் பல மாதங்களாக தேடி ரூ.25 ஆயிரம் மதிப்பில், ஜெர்மன் நாட்டில் வெயில், மழையில் இருந்து பாதுகாக்க பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வண்டியை ஆர்டர் செய்து வரவழைத்து தனது சைக்கிளில் இணைத்து ராஜாவை போல் அமர வைத்து சைக்கிளிங் அழைத்து வருகிறார். மேலும், இசிஆர் சாலை வழியாக பல்வேறு வாகனங்களில் பயணிக்கும் பலர், மனிதனை மனிதனே மதிக்காத இந்த காலகட்டத்தில் தான் பாசத்துடன் வளர்க்கும் நாய்க்கு மரியாதை கொடுத்து பிரத்யேக வாகனத்தில் அமர வைத்து ராஜாவை போல் அழைத்து வரும் ஹரியை பாராட்டி வருகின்றனர்.

The post ஜெர்மனியில் வண்டி ஆர்டர் செய்து வளர்ப்பு நாயுடன் இசிஆரில் வலம் வரும் ஐடி ஊழியர் appeared first on Dinakaran.

Tags : ECR ,Germany ,Mamallapuram ,Hari ,Nawalur ,Chennai ,Duraipakkam ,OMR ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...