×

காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தல்

சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கர்நாடகா தண்ணீரை திறந்துவிட ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கில் கூடியது. இதில் பங்கேற்க காலை 9.30 மணி முதலே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வந்தனர். சரியாக 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வந்தார். அவர், திருக்குறள் வாசித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள்மற்றும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

கேள்வி நேரம் முடிந்ததும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசினர் தனி தீர்மானம் கொண்டுவந்து முன்மொழிந்து பேசியதாவது: தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய காவிரி நதிநீர் உரிமையை காக்கும் கடமையை நோக்கிய நமது சிந்தனையை, எண்ணத்தை, இன்னும் சொன்னால் கட்டளையை இடக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இது அமைந்திருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், காவிரி நதிநீர் உரிமையை காப்பதில் திமுக என்றும், எப்போதும் எந்த சூழலிலும் உறுதியாக இருக்கும் என்ற உறுதிமொழியை இந்த மாமன்றத்திற்கு முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராக திறந்து விடப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு மேட்டூர் அணை திறப்பதற்கான குறிப்பிட்ட ஜூன் 12ம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022ம் ஆண்டில் முன்கூட்டியே மே மாதம் 24ம் நாள் அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் பயனாக 2021-22ம் ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவிலும், 2022-23ம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது.

இந்த ஆண்டில், 1 ஜூன், 2023 அன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டி.எம்.சி நீரளவையும், தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, 12.06.2023 அன்று மேட்டூர் அணையை குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடை பகுதிகள் வரை சென்றடைந்தது. நமது விவசாயிகளும் கடந்த ஆண்டுகளை போலவே குறுவை பயிரை இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்கள். இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது.

தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், 2023-24 பாசன ஆண்டானது ஒரு பற்றாக்குறை ஆண்டு என்ற காரணத்தை கூறி கர்நாடகா நமக்கு அளிக்க வேண்டிய நீரினை அளிக்கவில்லை. இதனால் குறுவை பயிர் பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், 19.07.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி அமைச்சர் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மாதவாரியாக தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்துமாறு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜூலை 27ம் தேதி அன்று, கர்நாடகாவின் 4 அணைகளின் மொத்த கொள்ளளவு 30 ஆண்டு சராசரியில் 84 விழுக்காடாகவும், அந்த அணைகளின் நீர்வரத்து 30 ஆண்டு சராசரியில் 51 விழுக்காடாகவும் இருந்த போதிலும், பில்லிகுண்டுலுவில் 13 விழுக்காடு மட்டுமே நீர் வரப்பெற்றது. இதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிற்கு உடனடியாக நீர் வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவரிடம் கோரப்பட்டது. இதையடுத்து கபினி அணையில் இருந்து வினாடிக்கு 11,000 கன அடி நீரினை அடுத்த 6 நாட்களுக்கு திறக்குமாறு கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இப்படி பலமுறை உத்தரவிட்டும் கர்நாடகா தண்ணீர் காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை.

இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 11.10.2023 அன்று அடுத்த கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில், பற்றாக்குறை ஆண்டாகிய 2023-24ல், ஏற்கெனவே குழு மற்றும் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீரளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்யவும், அடுத்த 10-15 நாட்களுக்கு அளிக்க வேண்டிய நீரையும் சேர்த்து வழங்க வலியுறுத்த உள்ளோம். மேலும், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து, தேவைப்படின் தக்க சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில், 5.10.2023 வரை 90.25 டி.எம்.சி. நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக, முறைபாசனத்தின்படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் எஞ்சியுள்ள நாட்களுக்கு நாம் நமக்கு உரிய நீரை பெற்று, குறுவை பயிரையும், அடுத்து நடவு செய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நமது வேளாண் மற்றும் பொதுமக்களின் நலன் காக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பின்வரும் தீர்மானத்தை இந்த பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று கோருகின்றேன். தமிழ்நாட்டு மக்களின் உணவு தேவைக்கான மட்டுமல்ல – மனித உயிர்களின் உயிர் தேவைக்கு அவசியமானது காவிரி நீர்.

அதனை தமிழ்நாட்டு மக்களுக்கு பெற்றுத் தருவதில் எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு பெற்றுத் தருவோம். ஒன்றிய அரசானது, இதில் முறையாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும். இதற்கான அனைத்துவித முயற்சிகளையும் திமுக அரசு தயங்காமல் செய்யும் என்று மாமன்ற உறுப்பினர்களுக்கு உறுதி அளிக்கிறேன். அதே உணர்வுடன் இந்த தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். “தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு அடித்தளமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசிற்கு உத்தரவிட ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்றார்.

முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எடப்பாடி பழனிசாமி (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வானதி சீனிவாசன் (பாஜ), சிந்தனைசெல்வன் (வி.சி), நாகைமாலி (மார்க்சிய கம்யூ), மாரிமுத்து (இந்திய கம்யூ.), சதன்திருமலைகுமார் (மதிமுக), ஜவஹருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சிபாரதம்) ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். பாஜ உறுப்பினர் வானதி சீனிவாசன் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

* எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை சபாநாயகர் மீண்டும் நிராகரித்தார்
பேரவை தொடங்குவதற்கு முன்னதாக, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்து பேசினர். அப்போது, ‘எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் இருந்து வருகிறார். தற்போது, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி எதிர்க்கட்சி துணை தலைவர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கி விட்டு ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம். அதுகுறித்த கடிதம் தங்களிடம் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று கொண்டு எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை, பொறுப்பை உடனடியாக மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு சபாநாயகர், ‘எனது பதிலை ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். அதன்படி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் இதுபற்றி செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,‘‘ 6.2.2013 அன்று அப்போதைய சபாநாயகர் தனபால், இதுபோன்ற ஒரு பிரச்னையில் இன்றைய அமைச்சர் பெரியகருப்பன் வைத்த கோரிக்கைக்கு தெளிவாக பதிலளித்தார். அந்த பதிலையே இப்போது குறிப்பிடுகிறேன். அவர், சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்குவது சபாநாயகரின் முழு உரிமை, முழு அதிகாரத்திற்கு உட்பட்டது. இதுபற்றி சட்டமன்றத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை. எனது அறைக்கு வந்து கேட்டால் பதில் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார். அந்த பதிலை வேண்டுமானால் இதற்கும் பதிலாக எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றார்.

The post காவிரி விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief of the ,Council on the Kaviri Affair ,Stalyn ,Karnataka government ,Tamil Nadu ,Union government ,Karnataka ,Kaviri Water Management Commission ,Stalin ,Dinakaraan ,
× RELATED செந்துறை வடக்கு ஒன்றியத்தில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் ஆலோசனை கூட்டம்