×

செங்கல்பட்டு வரை என் பிரியாணி பயணிக்கிறது!

நன்றி குங்குமம் தோழி

பிரியாணி குயின் பர்ஷானா

‘‘குக்கிங் என்னோட ஃபேஷன். அடுத்தவர்களுக்கு செய்து கொடுத்து அவர்கள் சாப்பிடுவதை பார்த்து திருப்தி அடைவதே என் கேரக்டர்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தார் சென்னை,
திருவேற்காட்டில் வசிக்கும் பிரியாணி குயின் பர்ஷானா. ‘‘பிரியாணி தயாரிப்பில் என்னுடையது எல்லாமே ஹோம் மேட். ஃபர்ஸ்ட் குவாலிட்டி. நாங்க என்ன சாப்புடுகிறோமோ அதைத்தான் வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதே எனது தாரக மந்திரம். மேலும் என்னுடையது குவாலிட்டி ஸ்பெஷல் பிரியாணி’’ என்றவாறு மேலே தொடர்ந்தார்.

‘‘பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்த நான், ஒரு குடும்பத் தலைவியாக கணவர், மூன்று குழந்தைகள்னு குடும்பத்தை மட்டுமே கவனித்து வந்தேன். என் கணவர் பர்னிச்சர் தொழில் செய்கிறார். சின்ன வயதில் இருந்தே நான் கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறியவள் என்பதால், வறுமையால் படிப்பு தடைபடுகிற பிள்ளைகளின் கல்விக்காக, நண்பர்கள் மூலம் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தேன்’’ என்கிற பர்ஷானா, சத்தமில்லாமல் ஆன்லைன் வழியாக பிரியாணி தயாரிப்பு தொழிலும் செய்து வருகிறார்.

‘‘எனக்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் கணவரின் குடும்பம் பெரியது. மாமா, மாமி, மச்சான், அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, மருமகள், மருமகன், நாத்தனார், மைத்துனர், அவர்களின் குழந்தைகள் என எங்களுடையது கூட்டுக் குடும்பம். குடும்ப உறுப்பினர்களே கிட்டதட்ட 100 பேர் இருப்போம். அதனால் எங்கள் வீட்டில் எப்போதும் சமையல், சாப்பாடுன்னு விருந்து நடந்துகொண்டே இருக்கும்.

எனக்கு நண்பர்கள் வட்டமும் அதிகம். என் வீட்டுக்கு வருபவர்கள் எனது சமையலை சாப்பிடாமல் போகவே முடியாது. அப்படி ருசி பார்த்தவர்களிடம் இருந்து எனக்கு வரும் ஒரே கேள்வி, ஏன் உன்னுடைய இந்த பிரியாணி தயாரிப்பை நீ தொழிலாக மாற்றக்கூடாது என்பதாகவே இருந்தது. அந்த அளவுக்கு என் பிரியாணியில் சுவையும், மணமும் எல்லோர் மனதிலும் பசக்கென ஒட்டிக் கொள்ளும். காரணம், என்னுடையது முழுக்க முழுக்க குவாலிட்டி ஸ்பெஷல். குவாலிட்டியில் மட்டும் என்னை நான் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை’’ என புன்னகைக்கிறார்.

‘‘உறவினர்களும், நண்பர்களும் வலியுறுத்தினாலும், என்னால் இதைத் தொழிலாக கொண்டுபோக முடியுமா என்கிற சந்தேகம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில் என் கணவரின் பர்னிச்சர் தொழில் சென்னை வெள்ளம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா நேர லாக்டவுன் என அடுத்தடுத்து பாதிப்படைந்து வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. இதனால் அவர் பர்னிச்சர் ஷோரூமை மொத்தமாக மூடிவிட்டு ஆன்லைன் வழியாக செய்யத் தொடங்கினார். இந்த நேரத்தில்தான் நானும் தைரியமாக முடிவெடுத்து என்னுடைய பிரியாணி தயாரிப்பு தொழிலில் இறங்கினேன்.

என் பிரியாணி சுவையை ருசித்தவர்கள் மூலம் அடுத்தடுத்து ஆர்டர்கள் எனக்கு தொடர்ச்சியாக வர ஆரம்பித்தது, இதனை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியதன் மூலம் 20 நாளிலேயே 50 டெலிவரி வரை என்னால் ரீச் செய்ய முடிந்தது. வாரத்திற்கு 30 பல்க் ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளது. இப்போது வரை 300 டெலிவரிகளை நெருங்கியுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பு வெற்றிமாறன் சாரின் விருது வழங்கும் விழாவில் என் பிரியாணி ஸ்டாலும் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்தே ஐ.டி ஊழியர்களின் பல்க் ஆர்டர்கள் வர ஆரம்பித்தது.

இது எங்கள் பாரம்பரியத் தயாரிப்பு. என் மாமியாரிடம் இருந்தே சுவையான பிரியாணி தயாரிப்பினை நான் கற்றுக் கொண்டேன். புளி சேர்க்கும் உணவுக்கு மட்டுமே நல்லெண்ணெய் பயன்படுத்துகிறேன். மற்றபடி பிரியாணி முழுவதையும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தியே தயாரிக்கிறேன். சாப்பிடும்போது, இது தேங்காய் எண்ணெயில் தயாரான பிரியாணி என சுத்தமாக யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. வாசனையினை வைத்தும் உணர முடியாது. அந்த சுவை பக்காவாக, ஒரு ஃபுல் கல்யாண பிரியாணியினை சாப்பிட்ட திருப்தியையும், மனநிறைவையும் கொடுக்கும்.

அதேபோல் மசாலாக்களையும் நான் பிரியாணியில் அதிகம் சேர்ப்பதில்லை. பட்டை, கிராம்பு, ஏலக்காயுடன் வீட்டில் தயாரித்து அரைத்த மசாலாப் பொடி மட்டுமே சேர்க்கிறேன். இத்துடன் கிங் ஆஃப் பாசுமதி எனப்படும் ஹைகுவாலிட்டி லால்கிலால் பிராண்ட் பாசுமதி அரிசியினை மட்டுமே சேர்க்கிறேன். இந்த அரிசிக்கான வாசனையே தனி. சீரக சம்பா அரிசியில்தான் பிரியாணி வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு மட்டுமே, சீரக சம்பா பிரியாணி தயாராகும்.

சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, காடை பிரியாணி, நாட்டுக் கோழி பிரியாணி, கீ ரைஸ், மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, காடை கிரேவி, நாட்டுக்கோழி கிரேவி,
சிக்கன் சால்னா, மட்டன் சால்னா, காடை சால்னா, சிக்கன் வறுத்த கறி, சிக்கன் 65, மீன் உணவுகள் என லிமிட்டெட் மெனுக்கள் மட்டுமே என்னுடையது. இத்துடன் காலை மற்றும் இரவு உணவாக இடியாப்பம், சிக்கன் பாஸ்தா, மட்டன் பாஸ்தா, மட்டன் சேமியா, சிக்கன் சேமியா போன்றவையும் தயாராகும். என் தயாரிப்புக்குள் உங்களுக்குத் தேவையானதை நீங்கள் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

எங்களிடம் பக்கெட் பிரியாணியும் உண்டு. 20 நபர்களுக்குள் உள்ள ஆர்டரை முதல்நாள் மாலைக்குள் கொடுத்தால் போதும். எனது பர்ஷானா பிரியாணி காம்போவில் நீங்கள் ஆர்டர் செய்வது சிக்கனோ, மட்டனோ அது எதுவாக இருந்தாலும் அத்துடன் எங்களின் ஸ்பெஷல் சிக்கன் வறுத்த கறி, கத்தரிக்காய் கிரேவி, ஆனியன் ரைத்தா, பிரெட் அல்வாவுடன் முட்டையும் இணைத்து அனுப்புவோம். அலுவலக ஆர்டர்கள் எனில், தட்டு, கரண்டி, ஸ்பூன், டிஸ்யூ பேப்பர் கொடுத்து அனுப்புவோம். குடும்ப நிகழ்ச்சி என்றால் இலை, தண்ணீர் பாட்டில் கொடுக்கப்படும். சென்னை தாண்டி தாளம்பூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வரை என் பிரியாணி பயணிக்கிறது. எவ்வளவு தொலைவு சென்றாலும் சூடாக இருப்பது மாதிரி ஃபாயில் பேப்பரில் ரேப் செய்து சுடச்சுட வாடிக்கையாளர்களின் கைகளில் கிடைப்பது மாதிரி அனுப்புவோம்.

குறைந்தது 4 நபரில் தொடங்கி 200 நபர்கள் வரை பிரியாணிக்கான பல்க் ஆர்டர்கள் தற்போது வருகிறது. சென்னையில் வண்ணாரப்பேட்டை, அடையாறு, ஓ.எம்.ஆர் வரை எந்த ஏரியா என்றாலும் போர்டர் ஆப் வழியாக டெலிவரி செய்கிறோம். சில ஏரியாக்களுக்கு பைக் ரைடர் வழியாகவும் டெலிவரி செய்யப்படுகிறது.

தொழில் தொடங்கி நான்கு மாதங்கள் நிறைவடைஞ்சுருக்கு. வாடிக்கையாளர்களிடம் எனக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. தரமான உணவுப் பொருட்களை சரியாக கொடுக்கிறேன் என்கிற மனநிறைவை இந்தத் தொழில் எனக்குக் கொடுத்திருக்கிறது. அத்துடன் லாபமும் வருது. இன்னும் பெரிய அளவில் கம்பெனி ஆர்டர்கள், கல்யாண ஆர்டர்கள் என பல்க் ஆர்டர்களாக விரிவுப்படுத்தும் எண்ணமும் இருக்கிறது. கணவரும், குழந்தைகளும் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருக்கிறார்கள்.கிடைக்கும் லாபத்தில் சேரிட்டிக்காகவும் கொஞ்சம் எடுத்து வைக்கிறேன். எதிர்காலத்தில் நலிவடைந்த மக்களுக்கான கம்யூனிட்டி கிச்சன் ஒன்றைத் தொடங்கும் எண்ணமும் இருக்கிறது…’’ விரல் உயர்த்தி புன்னகைக்கிறார் பர்ஷானா தஸ்லீம்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post செங்கல்பட்டு வரை என் பிரியாணி பயணிக்கிறது! appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Doshi Biryani Queen Parshana ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா