×

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளான குடிநீர் இயந்திரம்

*ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை

*குடிநீர் பாட்டில் விற்பனையை அதிகரிக்க திட்டம்?

மயிலாடுதுறை : ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறைந்த கட்டணத்தில் நீண்ட நேரம் பயணம் செய்யலாம் என்பதாலும், அசதியாக இருக்காது என்பதாலும், பாதுகாப்பான பயணம் என்பதாலும், பெரும்பாலானோர் ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இலவச வைபை வசதி, நகரும் படிக்கட்டு என்பது உள்ளிட்ட பல்வேறு கூடுதல் வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ஆன்மீக, நவகிரக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மயிலாடுதுறையை சுற்றியுள்ள சைவ வைணவ ஆலயங்களுக்கு வருவதுடன் ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். வட இந்தியாவில் இருந்து சிலர், பல லட்சம் செலவு செய்து ரயிலை வாடகைக்கு எடுத்துக் கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையம் மட்டுமல்லாமல் திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால், கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர், திருச்சி ரயில் நிலையம் வரை உள்ள ரயில் பாதையில் இடைப்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்களில் போதுமான சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. ரயில் நிலையங்களில் குடிநீர் வராத நிலையில் ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரூ.1, ரூ.5 நாணயம் செலுத்தினால் ரூபாய் மதிப்புக்கு தகுந்தார்போல் தண்ணீர் வரும். இந்த குடிநீர் வழங்கும் இயந்திரம் கடந்த இரண்டு வருடமாக செயல்படாமல் உள்ளது. ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதில்லை.ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில் நிலையங்களில் ஒரு ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது. இந்த திட்ட மூலம் ஒரு ரூபாய்க்கு சுத்தமான 300 மி.லி. குடிநீர், ரூ.5க்கு ஒரு லிட்டர் குடிநீர் வழங்கி வந்தது. கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

தமிழகத்தில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் இந்தத் திட்டம் அமலில் இருந்தது. இதில் குடிநீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரங்கள் நடைமேடையில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நிற்கும் இடத்தின் அருகே நிறுவப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலும், இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தது. இது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படாமல் முடங்கியது. குடிநீர் பாட்டில் விற்பனையை அதிகரிக்க, கட்டணம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் இயந்திரத்தை முடக்கப்பட்டதாக கூறப்படுகிது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வேறு வழியின்றி ஒரு லிட்டர் ரூ.15,20 என்று கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படாமல் உள்ளதால் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஒரு ரூபாய் குடிநீர் திட்ட இயந்திரம் காட்சி பொருளாக மாறி உள்ளது. எனவே காலம் தாமதிக்காமல் மீண்டும் ஒரு ரூபாய் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தெற்கு ரயில்வே நிர்வாகம் மயிலாடுதுறை முதல் விழுப்புரம்-திருச்சி மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

* குடிநீர் பாட்டில் விற்பனையை அதிகரிக்க, கட்டணம் செலுத்தி குடிநீர் பிடிக்கும் இயந்திரத்தை முடக்கப்பட்டதாக கூறப்படுகிது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

The post மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காட்சி பொருளான குடிநீர் இயந்திரம் appeared first on Dinakaran.

Tags : Mailadudura ,station ,Mailadudura Railway Station ,Dinakaraan ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை...