×

ஒடிசா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 28 உடல்களை நாளை தகனம் செய்ய அரசு முடிவு..!!

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோரில் 3 ரயில்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழந்த 297 பேரில் 28 பேரின் உடல்கள் 4 மாதங்களாக அடையாளம் காணப்படாமல் உள்ளன. ஒடிசாவில் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த ஜூன் மாதம் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பயணிகள் காயம் அடைந்தனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. இந்த உடல்கள் தற்போது புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை உறவினர்கள் யாரும் உயிரிழந்தவர்களை தேடி வராததால் இவர்களது உடல்களை அடக்கம் செய்ய புவனேஸ்வர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கான செயல் திட்டத்தை உருவாக்கிய புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம், இதனை எய்ம்ஸ் நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளது. இதன்படி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் 28 உடல்களையும் மாநகராட்சியின் உதவி சுகாதார அலுவலரிடம் ஒப்படைப்பார். அதன் பின்னர் உடல்கள் அனைத்தும் நாளை தகனம் செய்யப்படும். இருப்பினும் உயிரிழந்தவர்களின் தகவல்கள் மாநகராட்சியிடம் இருக்கும் என்பதால் பிற்காலத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் யாரேனும் தகவல்கள் கேட்டு வந்தால் அவர்களுக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும் என புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து: அடையாளம் காணப்படாத 28 உடல்களை நாளை தகனம் செய்ய அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Odisha train accident ,Balasore ,Balasore, Odisha ,Odessa train accident ,Government ,
× RELATED சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி