×

டாஸ்மாக் கடைக்கு போகும் திருட்டு செல்போன்கள்

 

கோவை, அக்.9: கோவை நகரில் செல்போன் திருட்டு அதிகமாகி வருகிறது. குறிப்பாக பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், பஸ் மற்றும் பொது இடங்களில், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் செல்போன்களை திருடர்கள் நைசாக திருடி வருகின்றனர். சிலர் செல்போன்களை திருடி சிம்கார்டை கழற்றி வீசி விட்டு உடனடியாக விற்பனை செய்து வருகின்றனர். சில செல்போன் கடைகள் மட்டுமின்றி டாஸ்மாக் கடைகளிலும் திருட்டு செல்போன்களை வாங்க சிலர் இருப்பதாக தெரிகிறது.

மது போதை கும்பல் செல்போன்களை திருடி டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதாகவும், அங்கே கிடைத்த விலைக்கு விற்று மதுபாட்டில்களை வாங்கி குடிப்பதாகவும் புகார் கிடைத்துள்ளது. காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில் செல்போன் திருடும் கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இந்த கும்பல் செல்போன்களுடன் குறிப்பிட்ட சில பகுதி டாஸ்மாக் கடைக்கு செல்வதாகவும், அங்கே சிலர் செல்போன்களை 500 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு வாங்குவதாகவும் தெரிகிறது.

செல்போன் திருடி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த திருட்டு அதிகமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காணாமல்போகும் செல்போன்கள், திருடப்படும் செல்போன்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டு வழக்கு பதிவானால் அந்த செல்போன்களில் சிக்னல் டிராக்கிங் செய்யப்படுவது வழக்கம். இதில் சிலர் காணாமல் போன செல்போன்களை எடுத்தால் திருப்பி வழங்கி விடுகிறார்கள்.

மற்றவர்கள் ஸ்விட்ச் ஆப் செய்து விடுவதால் மீட்கப்பட முடியாத நிலைமை இருப்பதாக தெரிகிறது. காணாமல் போகும் செல்போன்கள் மீட்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் திருட்டு செல்போன்கள் மீட்கப்படுவது அரிதாகவே இருக்கிறது. செல்போன் திருட்டை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

The post டாஸ்மாக் கடைக்கு போகும் திருட்டு செல்போன்கள் appeared first on Dinakaran.

Tags : Tasmac store ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்