×

கரணமா? மரணமா?

கோவை மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன். அதிவேகமாக பைக்கில் சென்று, அதை வீடியோவாக வெளியிடுவது அவரது வழக்கம். கடந்த மாதம் 17ம் தேதி அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் சாகசம் செய்தபோது, விபத்தில் சிக்கினார். இதையடுத்து பாலுசெட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது. வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் காரணமாக அவரது ஓட்டுனர் உரிமம் தமிழக போக்குவரத்து துறையால் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரின் யூடியூப் தளமும் மூடக்கப்பட்டுவிட்டது.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள், இளைய தலைமுறையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பு செய்வதோடு, அவர்களை தவறாக வழிநடத்தவும் தவறுவதில்லை. பலரும் தங்கள் சாகசங்களை வலைதளங்களில் பதிவிட்டு, அதற்கான லைக்குகளை அள்ளுவதிலும், தங்களை பின்தொடர்வோர் எண்ணிக்கையை அதிகரித்து கொள்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லும் சமூக வலைத்தளங்களில் இவை சக்கை போடு போடுகின்றன. டிடிஎப் வாசனும் பலமுறை தனது பைக் சாகசத்தை யூடிபில் பகிர்ந்துள்ளதோடு, மின்னல் வேகத்தில் பைக்கில் செல்லுவது குறித்து பாடமும் எடுத்தார். முன் சக்கரத்தை வீலிங் செய்து சாகசம் காட்டும் நிகழ்ச்சிகளால், 27 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்தனர். இதன்மூலம் பணமழையில் நனைந்துள்ளார்.

பிரபல நடிகர்களுக்கு இணையாக அவர் சமூக வலைத்தளங்களில் இளைஞர்களை கவர்ந்தார். அவரது சாகசங்களுக்கு கமென்டுகளும், லைக்குகளும் குவிந்தன. இவ்வளவு புகழ்மிக்க நபர், தனக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப நடந்து கொண்டிருக்க வேண்டும். தான் பைக்கில் சாகசங்கள் நிகழ்த்தும்போது, அதற்கு பயன்படுத்தும் பைக்கின் விலை, அதற்காக அணியும் கவச உடைகளின் உடை ஆகியவற்றையும் தனது ரசிகர்கள் மத்தியில் தெளிவு படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய பைக் சாகசங்களை அவரை பின்தொடரும் இளைஞர்களும் செய்யத் தொடங்கினால், சாலை விபத்துகள் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இந்தியாவில் சாலை விபத்துகள் தமிழகத்தில் அதிகம் நடக்கின்றன. இதில் சிக்குவோர் பெரும்பாலும் 15 வயதிற்கு மேல் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்தான். அத்தகைய இரண்டும் கெட்டான் வயதில் அவர்களுக்கு ரேஸ் பைக்குகள் மீது ஒரு மோகம் பிறப்பதோடு, அதை வாங்கி சாகசங்கள் நிகழ்த்த வேண்டும் என்கிற எண்ணங்களும் அதிகம் எழும். இளைஞர்கள் பைக் மோகத்தில் சாலைகளில் வித்தைகள் காட்டினால், அதனால் ஏற்படும் விபரீதங்களும் அதிகம். அவ்வாறு ரேஸ் பைக் ஓட்டும்போது எதிரே வருவோரும் சில சமயங்களில் விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறான முன்னுதாரணங்களை பதி0விடுவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்.

சென்னை ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளது போல விளம்பரத்திற்காக இத்தகைய செயல்கள் கூடாது என்பதை அனைவருமே நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும். ஒன்றிய அரசும், மாநில அரசும் அடிக்கடி சமூக வலைதளங்களை கண்காணித்து, இளைஞர்களை தவறாக வழிநடத்தும் சாகச செயல்களை தடை செய்திட வேண்டும். அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க கூடாது. சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வதந்திகளைப் போலவே இத்தகைய சாகச வீடியோக்களை பகிரும் இளைஞர்களாலும் பாதிப்பு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

The post கரணமா? மரணமா? appeared first on Dinakaran.

Tags : Karana ,DDF ,Vasan ,Goa District Vijayangau ,
× RELATED கோடைகாலம் முடிவதற்குள் ஏரி, குளம்,...