×

46 ஆடுகள் பலியிட்டு கைகுத்தல் அரிசியில் ‘கமகம’ கறி விருந்து

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது முதல்நாடு கிராமம். இக்கிராம கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் பீடம் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா இங்கு நடைபெறும். இந்த திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வார காலம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வருவதில்லை. இந்த திருவிழாவுக்காக முதல்நாடு கிராமத்தில் நேற்றிரவு 11 மணியளவில் ஆண்கள் மட்டும் ஒன்றுகூடி கால் படாத மண் எடுத்து பீடம் அமைத்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை முதல் பொங்கல் வைத்தனர்.

பின் 46 ஆடு செம்மறி ஆடு பலியிட்டு, கைக்குத்தல் அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டது. பின் பச்சரிசி சாதம் உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைக்கப்பட்டது. இதையடுத்து நடந்த கறி விருந்தில் ஆண்கள் அனைவரும் பங்கேற்றனர். மேலும், இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால், மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருவிழாவில் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post 46 ஆடுகள் பலியிட்டு கைகுத்தல் அரிசியில் ‘கமகம’ கறி விருந்து appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Mulutnadu ,Ramanathapuram district ,Kanmai ,
× RELATED 115 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை