×

அத்திப்பள்ளி பட்டாசு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்!

ஓசூர்: அத்திப்பள்ளி பட்டாசு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென்று கொளுந்து விட்டு எறிந்துள்ளது. இந்த தீவிபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 10 இருசக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள், ஒரு சரக்கு லாரி உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும், பட்டாசு கடைக்கு அருகே இருந்த மதுபான கடையும், டீ கடையும் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பட்டாசு கடையில் பெரும்பாலானவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். தீபாவளி விற்பனையை முன்னிட்டு வாணியம்பாடி, அம்மாபேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்டாசு கடை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே கர்நாடக அரசு பட்டாசு தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா .5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அத்திப்பள்ளி பட்டாசு குடோன் தீ விபத்தில் பலியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த 8 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 நபர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அத்திப்பள்ளியில் பட்டாசு குடோன் வெடித்த விபத்தில் காயமடைந்தவர்களில் 4 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நபர்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பின்போது ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

The post அத்திப்பள்ளி பட்டாசு தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்! appeared first on Dinakaran.

Tags : Attipaki firework fire accident ,Osoor ,Attiapola fire accident ,Supramanian ,Chakarapani ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் கால்நடைகளை...