சிவகங்கை, அக். 8: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் துரையரசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்துள்ள மாணவர்களின் இன சுழற்சி, மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது.
எம்.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.காம், எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினிஅறிவியல் பிரிவு உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு காலியாக உள்ள இடங்களுக்கு இறுதிக்கட்ட கலந்தாய்வு இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கு அக்.9 அன்றும், விண்ணப்பிக்காதவர்களுக்கு அக்.10 அன்றும் காலை 9 மணிக்கு நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு நகல்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். சேர்க்கை கட்டணமாக எம்.ஏ மற்றும் எம்.காம் மாணவர்கள் ரூ.1,000, எம்.எஸ்சி மாணவர்கள் ரூ.1,020, கணினி அறிவியல் மாணவர்கள் ரூ.1,520 செலுத்த வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகம் தவிர்த்த பிற பல்கலைக்கழக இணைவு கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் கூடுதலாக ரூ.195 கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சிவகங்கை மன்னர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இறுதிகட்ட கலந்தாய்வு appeared first on Dinakaran.
