![]()
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வந்த மரோஜ் சுரங்கப்பாதை நேற்று பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில், ஜம்மு -நகர் தேசிய நெடுஞ்சாலையில் இருவழிகளிலும் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மரோஜ் என பெயரிடப்பட்ட இந்த சுரங்கப்பாதையானது நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ள பகுதியை மக்கள் கடந்து செல்வதற்கு உதவும் வகையில் பள்ளத்தாக்கில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஜம்மு காஷ்மீரில் ராம்பன் முதல் பனிஹால் வரை ரூ.82கோடி மதிப்பீட்டில் 395மீட்டர் மரோஜ் சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது. 250 மீட்டர் தூரம் 2 வழித்தடமாக இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சீதாராம் பாசி பள்ளத்தாக்கு பகுதி, மரோஜ் பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டம் மூலம் முடிக்கப்பட்ட இந்த பணிகள் ஜம்முவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், முதன்மையான சுற்றுலா தளமாகவும் மேம்படுத்த உதவும்.
மேலும் இந்த திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு 200 மீட்டர் பயண தூரம் குறையும். சவாலான சாய்வு பகுதிகளை தவிர்த்து வாகனங்களில் சீரான இயக்கத்தை இது எளிதாக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
The post ஜம்முவில் புதிய சுரங்கப்பாதை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு appeared first on Dinakaran.

