×

தாமரையுடன் ஒட்ட நினைக்கும் குக்கர், தேனியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா


‘‘கான்ட்ராக்டர்கள் கதிகலங்கி இருப்பது எதனால்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்ட பொதுப்பணித்துறையில் பணிகள் செய்த கான்ட்ராக்டர்கள் அவ்வளவு பேரும் கலக்கத்தில் இருக்கிறார்களாம். கடந்த இலை ஆட்சி காலங்களில் அவசர கால பணியாக கால்வாய் சீரமைப்பு, மடைகள் சீரமைப்பு, குளத்தின் கரை அமைப்பு உள்ளிட்ட பணிகளை அப்போது இருந்த அதிகாரிகள் கூறி வேலை செய்தார்களாம். இந்த வேலைகளுக்கு அக்ரிமென்ட் காப்பி எதுவும் கிடையாதாம். பல லட்சம் சொந்த கை காசில் தான் வேலை செய்து இருக்கிறார்கள். ஆனால் இப்போது புதிதாக வந்துள்ள அதிகாரி, மிகவும் கறாராக இருக்கிறாராம்.

அக்ரிமென்ட் காப்பி இல்லாமல் செய்த வேலைகளுக்கு பன்ட் ரிலீஸ் ஆகாது என கூறி விட்டாராம். யார் சொல்லி நீங்கள் இந்த வேலையை செய்தீர்கள். வேலையின் தரத்தை பரிசோதனை செய்தார்களா என்றெல்லாம் கேள்வி கேட்க, இப்போது பொதுப்பணித்துறை கான்ட்ராக்டர்கள் கதி கலங்கி உள்ளார்களாம். தண்ணீரில் போட்ட காசு கைக்கு வந்து சேருமா என்ற கேள்விக்குறி நிலவி வருவதால், தற்போது பணிகள் எதுவும் நடக்காமல் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புது யுக்தியில் கல்லா கட்டுறாராமே ஒரு போலீஸ்காரர்..’’ என்று கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.

‘‘திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றும் இரண்டெழுத்து பெயர் கொண்ட போலீஸ்காரர் ஒருவர், பல்வேறு குற்ற வழக்குகளில், குற்றவாளிகளை தேடிச்செல்லும்போது புது யுக்தியை கையாளுகிறார். அதாவது, குற்றவாளியின் வீட்டில் இருக்கும் செல்போன், லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து விடுவாராம். அதை தேடி குற்றாவளிகள் காவல்நிலையம் வரும்போது, அவர்களிடம் பெரிய அளவில் காசு கறந்து விடுவாராம். குறிப்பாக, கஞ்சா வியாபாரிகள், லாட்டரி வியாபாரிகளிடம் பெருமளவில் கல்லா கட்டி வருகிறாராம்.

யாரேனும் சம்திங் கொடுக்க மறுத்தால், அப்பொருட்களை வேறு ஏதாவது வழக்கில் கணக்கு காட்டி, வீட்டிற்கு எடுத்துச்சென்று விடுவாராம். சமீபத்தில், அனுப்பர்பாளையம் காவல்நிலைய எல்லையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ1.90 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தரப்பில் இருந்து ரூ30 ஆயிரம் வரை பிடுங்கி விட்டாராம். கையில் பணம் வாங்காமல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கூகுள் பே… போன் பே… வழியாகவும் பணம் பெற்றுள்ளார். மேலும், புகார்தாரரிடம், குற்றவாளியை பிடிக்கச்செல்ல வேண்டும்… செலவுக்கு பணம் கொடுங்கள்… எனக்கூறி தனியாக ரூ10 ஆயிரம் “மீட்டர்’’ ஓட்டியுள்ளார்.

இப்படி, இரு தரப்பினும் மாறி மாறி காசு குவிப்பதில் இவர், படு கில்லாடியாக இருக்கிறார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த மூன்ெறழுத்து பெயர் கொண்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பக்கபலமாக இருக்கிறார். இருவருக்கும் இடையே “ஷேரிங்’’ பக்கா…வாக நடந்துவருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரை கட்சியுடன் தேனிக்காரர் அணி மற்றும் குக்கர் கட்சி இணைய வேலை நடக்குதாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. இதற்கான பேச்சுவார்த்தைகள் திரைமறைவுல நடந்து வருதாம். இத கேள்விப்பட்ட நெற்களஞ்சியம் மற்றும் மனுநீதி சோழன் உள்ளிட்ட மாவட்டங்களில் குக்கர் கட்சியினர் சமூக வலைதளங்களில் ஒரு கருத்தை பதிவிட்டு வர்றாங்களாம்.

அதுல, கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்பட வேண்டும் என்ற வசனங்கள் அடங்கியுள்ளதாம். ஒருவேளை குக்கர் கட்சி தாமரையுடன் இணைவதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறு கருத்துகளை முன்கூட்டியே பரப்பப்படுதா அல்லது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தலைமை முடிவு செய்துள்ளதா என்பது தொண்டர்கள் மத்தியில பெரும் குழப்பமா இருக்குதாம். விரைவில், இந்த விவகாரத்துல குக்கர் கட்சியின் முடிவு தெரிய வரும்ன்னு தொண்டர்கள் எதிர்பார்க்குறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் நிதி வசூலிக்க சொன்ன தலைமையிடம் அதிருப்தியில் உள்ளார்களாமே கட்சி நிர்வாகிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவ்வப்போது அரசியல் சூழ்நிலைகளும் மாறி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தேசிய கட்சி கூட்டணியிலிருந்து, இலை கட்சி விலகிய நிலையில் அதில் இருந்த பழம் கட்சி கட்சி தலைமை, தேர்தல் நிதியை வசூலிக்க சொல்லி ஒரு மாதத்திற்கு முன்பு நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறதாம். குறிப்பாக செல்வாக்கு மிக்க மாவட்டங்களான வட மாவட்டங்களில் ஒன்றியம், நகரம், மாவட்ட செயலாளர்கள் என்று குறிப்பிட்ட லகரங்களை வசூலித்து அளிக்க கோரி உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதற்கான பணிகளும் கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்று வருகிறதாம். நிர்வாகிகளோ தேர்தல் நிதி வசூல் ஆகாததால் அதிருப்தியில் இருந்து வருகிறார்களம்.

தற்போதுள்ள கூட்டணி சிக்கலில் ஒருவேளை தனித்து போட்டியிடும் நிலை வந்தால், என்ன ெசய்வது என்பதற்காக நிர்வாகிகளை வசூலிக்க சொன்னதாகவும், கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகிறார்களாம். போதிய நிதி வசூலாகாதால் கட்சி பொறுப்பே வேண்டாம் என்றும் பலரும் அதிருப்தியிலிருந்து வருகிறார்களாம். தேர்தல் தேதி அறிவிக்காத நிலையில் இந்த பாடு என்றால், தேர்தல் அறிவித்தால் என்ன நிலை ஏற்படுமோ என்று அச்சத்தில் இருக்கிறார்களாம் பழம் கட்சி நிர்வாகிகள்’’ என்றார் விக்கியானந்தா.

The post தாமரையுடன் ஒட்ட நினைக்கும் குக்கர், தேனியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Uncle ,Peter ,Public Works Department of Kadaikodi District ,
× RELATED கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை