×

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 11ம் தேதி முழு அடைப்பு: காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தி.மு.க விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அளித்த பேட்டி: இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகி விட்டன.

எனவே எஞ்சிய குறுவை பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி பணிகளை தொடங்கவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டிய நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இப்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பா.ஜ., கன்னட அமைப்புகள் நடத்தின.

எனவே உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும், கர்நாடகத்தில் போராட்டத்தை தூண்டி வரும் பாஜ மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், தமிழ்நாடு அரசு பல முறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11ம்தேதி முழு அடைப்பு மற்றும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முழு அடைப்பு தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோரிடம் ஆதரவு கேட்டுள்ளோம். பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி உள்ளோம். பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு சூழலுக்கு ஏற்ப இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்துள்ளார். முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய பாஜ அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 11ம் தேதி முழு அடைப்பு: காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : districts ,Union BJP government ,Cauvery basin ,Thanjavur ,Cauvery Basin Protection Committee ,DMK ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்