×

ஓசூர் அருகே மாநில எல்லையில் பட்டாசு கடையில் பயங்கர தீ 12 பேர் பலி; 4 பேர் கதி என்ன?..தர்மபுரியை சேர்ந்தவர்கள்; 3 லாரி, 7 டூவீலர்களும் நாசம்

ஓசூர்: ஓசூர் அருகே மாநில எல்லையில் பட்டாசு கடைக்கு லாரிகள் மூலம் கொண்டு வந்த பட்டாசு பண்டல்களை இறக்கும் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 4 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. கடைக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகள், 7 டூவீலர்கள் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் இருந்து மாநில எல்லையான கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை, தமிழக எல்லையோர பகுதிகளில் தீபாவளியையொட்டி 500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்கும்.

அதுபோலவே அத்திப்பள்ளி ஆர்ச்சிலிருந்து டோல்கேட் வரை கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளின் இரண்டு பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இருக்கும். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் அத்திப்பள்ளி டோல்கேட் அருகே நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு 3 லாரிகளில் சிவகாசியில் இருந்து பட்டாசுகள் கொண்டு வரப்பட்டன. கடையில் இருந்த தொழிலாளர்கள் பட்டாசு பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடையில் இருந்தவர்களும் சிதறி ஓடினர்.

உடனடியாக மூக்கண்டப்பள்ளி மற்றும் ஓசூரில் இருந்து 6 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறி தீ கொழுந்துவிட்டு எரிந்தது. விபத்தில் கடையின் அருகே பட்டாசு இறக்கி வைத்துக் கொண்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரி, 2 பிக்கப் லாரி மற்றும் 7 டூவீலர்கள் தீயில் கருகின. பட்டாசு கடையில் 30க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். தீ விபத்தில் கடையின் உரிமையாளரான நவீன் மற்றும் அவருடன் வேலை பார்த்து வரும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் பலத்த தீக்காயங்களுடன் அத்திப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டாசுகள் பல அடிதூரம் வெடித்துச் சிதறியதால் பொதுமக்களும், சாலையில் சென்றவர்களும் சிதறி ஓடினர். அருகில் உள்ள கடைகளிலும் தீப்பற்றி எரிந்தது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விபத்து ஏற்பட்டதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. விபத்து குறித்து அத்திப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பது நேற்று இரவு தெரிய வந்தது.

மேலும் 4 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.இறந்தவர்களில் பெரும்பாலானோர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. விபத்து நடந்ததும் 15 பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணியின்போது இரவு 7.30 மணி முதல் ஒன்றன் பின் ஒன்றாக 12 பேர் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் உடல்கள் மீட்கப்படலாம் என்ற தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

*மாநில எல்லையில் அதிகமான கடைகள்
தமிழகம் -கர்நாடக மாநில எல்லையான இப்பகுதியில் அதிகளவில் பட்டாசு கடைகள் எப்போதும் வைக்கப்படுகிறது. இங்கு நிரந்தர கடைகளும் நிறைய உள்ளன. அதேபோல தீபாவளிக்காக தற்காலிக கடைகளும் அதிகளவில் அமைக்கப்படும். பெங்களூருவில் வேலை பார்ப்பவர்கள் பலரும் இங்கு வந்து தீபாவளிக்காக பட்டாசு வாங்கி செல்கின்றனர். அதுபோலவே ஐடி தொழிற்சாலைகளில் பணி புரியும் தமிழக தொழிலாளர்கள் பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் திரும்பும்போது வழியில் இப்பகுதி கடைகளில் வாங்கி செல்கின்றனர் என கூறப்படுகிறது.

The post ஓசூர் அருகே மாநில எல்லையில் பட்டாசு கடையில் பயங்கர தீ 12 பேர் பலி; 4 பேர் கதி என்ன?..தர்மபுரியை சேர்ந்தவர்கள்; 3 லாரி, 7 டூவீலர்களும் நாசம் appeared first on Dinakaran.

Tags : Osur ,Dharmapuri ,nasam ,Qadi ,Dinakaraan ,
× RELATED அரூர் அருகே மாட்டிறைச்சி...