×

`ஃபுட்’டிகளுக்கு பிடித்தமான ஃபுட் ட்ரக்!

நகரப்பகுதிகளில் உள்ள சாலை களில் நாம் நடந்து செல்லும்போது, டிபன் ரெடி என்ற பலகையுடன் இருக்கும் வண்டிக்கடைகளை கடந்து செல்வோம். அந்தக் கடைகளில் கிடைக்கும் உணவினை வாங்கி சுவைக்கும்போது, ஒரு அலாதியான சுவை கிடைக்கும். இதுவே காலப்போக்கில் சிறிய அளவிலான ஆட்டோ உணவகங்களாக மாறியது. சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் தனக்கு சொந்தமான ட்ரக்கை காரம் ஃபுட் ட்ரக் எனும் உணவகமாக மாற்றி இந்தியா, சீனா குசைன் உணவுகளை சிறந்த முறையில் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார் கார்த்திக் கண்ணன் என்பவர். ஒரு மாலைப்பொழுதில் சாலையோரத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளைத் தயார் செய்து வழங்கி கொண்டிருந்த கார்த்திக்கை சந்தித்துப் பேசினோம். “மன்னார்குடிதான் எனக்கு சொந்த ஊரு. அங்குதான் பள்ளிப்படிப்பை முடித்தேன். அதனைத் தொடர்ந்து மதுரையில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் பிபிஏ படித்தேன். படித்து முடித்தவுடன் துபாய், சிங்கப்பூர், கொடைக்கா னல், பாண்டிச்சேரி, சேலம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் மேனேஜ்மெண்ட் சார்ந்த பணிகளை செய்து வந்தேன். சிறு வயதில் இருந்தே உணவின் மேல் எனக்கு அலாதி பிரியம். வெளிநாடுகளில் பணியாற்றும்போது என்னை மிகவும் கவர்ந்தது இந்த புட் ட்ரக் உணவகங்கள்தான். அந்தந்த நாட்டிற்கே உரித்தான ஸ்பெஷல் ரெசிபியை செய்து கொடுப்பார்கள்.

சிறிய ஆட்டோவில் வைத்து உணவுகளைத் தயார் செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். பெரிய உணவகங்களில் இருக்கும் கூட்டத்தை விட இங்கு மக்கள் தாங்கள் விரும்பிய உணவுகளை ருசிப்பதற்கு அலைமோதுவார்கள். பல நாடுகள், ஊர்கள் சுற்றிய நான் 2012ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். மற்ற நாடுகளில் என்னைக் கவர்ந்த ஃபுட் ட்ரக் உணவகத்தை இங்கு கொண்டு வர வேண்டும் என்று யோசித்தேன். அதற்காக நானே பிரத்தியேகமாக ஒரு ட்ரக்கை வடிவமைத்தேன். இதற்கு எனக்கு 3 மாதங்களுக்கு மேல் ஆனது. முதன்முதலில் இந்தப் பகுதியில் நாங்கள்தான் ஃபுட் ட்ரக் உணவகத்தைத் தொடங்கினோம். என் பெயரையும், என் மனைவி ரம்யாவின் பெயரையும் சேர்த்து காரம் என்று உணவகத்திற்கு பெயர் வைத்தேன். உணவகம் தொடங்கியபோது விற்பனை நல்ல முறையில் இருந்தாலும், அந்த இடத்தில் நான் நிலைத்து நிற்பதற்கு 4 மாதங்களுக்கு மேலானது. அனைத்தையும் எதிர்கொண்டுதான் இன்றைக்கு காரம் ஃபுட் ட்ரக்கை தொடர்ந்து நடத்தி வருகிறேன்.தற்போது 50 சதுரடி இடம் மட்டும் கொண்ட ஃபுட் ட்ரக்கில் 60க்கும் மேற்பட்ட டிஷ்களை என்னுடைய ஸ்டைலில் கொடுத்து வருகிறேன். ஏற்கனவே எனக்கு உணவுத்துறையில் அனுபவம் இருந்ததால் நானே அனைத்து உணவுகளையும் வாடிக்கையாளர்களுக்கு தயார் செய்து வழங்கினேன். இந்தியா, சீனா போன்ற பல்வேறு நாடுகளின் அனைத்து விதமான பிரபல உணவுகளை ஒரே இடத்தில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த உணவகத்தைத் தொடங்கினேன்.

அந்த வகையில் சிக்கன் ஸ்டிப்ஸ், கிரில்டு பிரான், கிரில்டு ஜூஸி திக்ஷ், கிரில்டு பன்னீர் என்று தருகிறோம். ஒவ்வொரு உணவிற்கும் தனித் தனியே மசாலாவை எங்களது கிளவ்டு கிச்சனிலேயே தயார் செய்கிறோம். சாலையோரத்தில் ட்ரக் இருப்பதால் காரில் செல்பவர்களும் இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இதுபோக பார்சல் வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. இடப்பற்றாக்குறை இருப்பதால், அதை புரிந்து கொண்ட வாடிக்கையாளர்கள் உணவின் ருசிக்காக காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். உணவிற்கு பொதுவாகவே வீட்டில் தயார் செய்யப்படும் மசாலாவைத்தான் பயன்படுத்துகிறோம். மாலை 6 மணிக்கெல்லாம் உணவகத்தை திறந்து விடுவோம். எங்கள் உணவகத்தின் சிக்னேச்சர் உணவு என்றால், அது காரம் சிக்கன் ரைஸ், காரம் சிக்கன் நூடுல்ஸ், காரம் கோபி மஞ்சூரியன், நேசமனி சவர்மா மற்றும் வெறித்தனம் சவர்மாதான். அதில் ஏற்கனவே சவர்மாக்கு தயார் செய்து வைத்திருக்கும் சிக்கன், மயோனைஸ், வெஜிடபிள், முட்டை சேர்த்து வாடிக்கையாளர்களுக்கு தருகிறோம். அதற்கு என்று தனி ரசிகர்களே இருக்கிறார்கள். இதன் புதுச்சுவையை வாடிக்கையாளர்கள் சுவைத்துவிட்டு, வீட்டுக்கும் வாங்கிச் செல்கிறார்கள். எனக்கே இது ஆச்சரியமாக இருக்கிறது. நான் விளையாட்டாகத்தான் முயற்சித்தேன். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

முதல் கடையை தொடங்கிய 10 மாதத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் 2வது ஃபுட் ட்ரக்கை தொடங்கினேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது 3 ஃபுட் ட்ரக் எங்களிடம் உள்ளது. அன்றன்றைக்கு என்ன வியாபாரம் ஆகுமோ, அதை மட்டுமே அளவாக வாங்கி வந்து உணவுகளை தயார் செய்வோம். அதாவது புரட்டாசி மாதத்தில் அசைவ உணவினை ஒரு சிலர் சாப்பிட மாட்டார்கள். அதனால் சைவ உணவினை அதிகமாக வாங்கி வந்து தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்போம்.எந்தவொரு தொழில் செய்தாலும் அதில் நிறை குறைகள் இருக்கும். குறிப்பாக உணவுகளைப் பொருத்த வரையில் ருசி நன்றாக இருந்தால் மட்டுமே தொடர் வாடிக்கையாளர்கள் வருவார்கள். எங்களது உணவில் கஸ்டமர்ஸ் எதாவது குறை சொன்னால் அதை நாங்கள் முழு மனதாக ஏற்றுக்கொள்வோம். அந்த வாடிக்கையாளரின் போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு மீண்டும் அந்த உணவினை நேர்த்தியாக அவர்கள் விரும்பும் சுவையில் தயார் செய்வோம்.

அதைத் தொடர்ந்து அவர்களை அழைத்து நேர்த்தியாக தயார் செய்த உணவினைக் கொடுத்து ருசி பார்க்க சொல்வோம். அவர்கள் நேர்மறையான கருத்து தெரிவித்தால் மட்டுமே மீண்டும் அதை ட்ரக்கில் வைப்போம். இவ்வாறு வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் எங்களை வாழ்த்துவார்கள். அப்போது சரியான தொழிலைத்தான் தேர்வு செய்திருக்கிறோம் என்ற திருப்தி கிடைக்கும். நமது கிராமப்பகுதிகளில் மீன் பிடித்து ஆற்றங்கரைகளில் தீ மூட்டி சுட்டுத் தின்பதைத்தான் இப்போது பார்பிக்யூ என்று எல்லா விதமான கறி வகைகளையும் வைத்து சொல்கிறார்கள். அதைத்தான் நாங்கள் சிக்கனில் கொடுக்கிறோம். சென்னையிலேயே முதல் முதலில் துவங்கிய ஃபுட் ட்ரக் என்றால் அது காரம்தான். உணவகம் என்றால் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். அதனால் இரவு வியாபாரம் முடிந்த பிறகு ட்ரக்கை நன்கு சுத்தம் செய்த பின்பே செட்டுக்கு எடுத்து செல்வோம். காலையில் முதல் வேலையாக ட்ரக்கை திறந்து வைத்து விடுவோம். இதனால் கெட்ட காற்று வெளியேறும். ட்ரக்கிலும் கெட்ட வாடை வராது. என்னைத்தேடி வந்த பல பேருக்கு ஃபுட் ட்ரக் உணவகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அறிவுரையும் வழங்கி வருகிறேன். மேலும், அவர்களுக்கு தேவையான ஃபுட் ட்ரக்கை நானே தேர்வு செய்து
கொடுக்கிறேன்’’ என்கிறார்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

பனீர் தவா ஃப்ரை

தேவையான பொருட்கள்

பனீர் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன்
வத்தல் பொடி – 1/2 ஸ்பூன்
சீரகப்பொடி, மல்லி பொடி – 1/2 ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 1 1/2 கப்.

செய்முறை

பனீரை ஃபிங்கர் சிப்ஸ் அளவுக்கு வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உப்பு, மஞ்சள் பொடி, சீரகப்பொடி, கொத்தமல்லி பொடி, தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு ஸ்பூன் முதல் ஒன்றரை ஸ்பூன் அளவு சோள மாவு சேர்க்கவும். மசாலாவுடன் பனீர் சேர்த்து ஊறவைக்கவும். அதன்பின் தவாவில் ஃப்ரை செய்து எடுக்கவும். இதை புதினா அல்லது மல்லி சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.

 

The post `ஃபுட்’டிகளுக்கு பிடித்தமான ஃபுட் ட்ரக்! appeared first on Dinakaran.

Tags : `Food'Ts! ,Tipon Ready ,Truck ,Disrupted ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!