×

பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்களில் கூகுள் மேப் படத்துடன் விஷமப்பிரசாரம்

*நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலூர் : பெரியாறு அணை குறித்து கூகுள் மேப் படத்துடன் சமூக வலைத்தளங்களில் விஷமப்பிரசாரம் செய்து வரும் சேவ் கேரளா பிரிகேட் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக விவசாயிகள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.கேரளாவில் மழை பெய்யும் போதும், பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போதும், சில கேரள அரசியல்வாதிகளும், விஷமிகளும் பெரியாறு அணைக்கு எதிரான கோஷம் எழுப்புவது கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

பெரியாறு அணை பலமாக இருக்கிறது. பேபி அணையை பலப்படுத்திவிட்டு, 142 அடியிலிருந்து 152 அடியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒரு முறைக்கு இருமுறை தீர்ப்பளித்தும், அந்த தீர்ப்பை ஏற்க மறுப்பதோடு, மீண்டும் இதுபோல் விஷமப் பிரச்சாரங்கள் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபகாலமாக கேரளாவைச் சேர்ந்த சில யூடியூப்பர்கள், பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் எங்கெல்லாம் செல்லும் எவ்வளவு நேரத்தில் செல்லும் என்று மக்களிடம் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். சாமானிய மக்களின் அன்றாட வாழ்வை சூறையாடும் இந்த வேலையை பலர் தொடர்ச்சியாக செய்து கொண்டு வருகிறார்கள்.

கடந்த 2 நாட்களாக கூகுள் மேப்பில் இருந்து பெரியாறு அணையின் படத்தை எடுத்து, பெரியாறு அணைக்கு ஆயுள் ஐம்பது ஆண்டுகள் மட்டுமே, ஆனால், 125 ஆண்டுகள் கடந்ததால் தண்ணீர் அழுத்தத்தால் அணை வளைந்து விட்டது, அணை நொறுங்கி வருவதை காணலாம், அது எப்போது வேண்டுமானாலும் உடையலாம். கேரளாவில் உள்ள 5 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சேவ் கேரளா பிரிகேட் அமைப்பினர் முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

சுமார் ஒரு லட்சம் பேர் வரையுள்ள இந்த முகநூல் பக்கத்தில் பதிவிடும் விஷமத்தனமான பதிவை அனைவருக்கும் பரப்பி செய்து கேரள மக்களிடையே ஒரு பீதியை கிளப்பி உள்ளனர். அதனால் பெரியாறு அணை குறித்த உண்மை நிலவரம் தெரியாத பலரும், தமிழகத்தை கண்டித்தும், பெரியாறு அணையை உடனே உடைக்க வேண்டும் என்றும் முகநூலில் பதிலளித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரியாறு அணையை பலப்படுத்திய முன்னாள் மத்திய நீர்வள ஆணைய தலைவர் கே.சி தாமஸ், ‘‘கேரளாவில் உள்ளவர்களுக்கு பெரியாறு அணையின் உறுதியையும், பாதுகாப்பையும் புரியவைக்க, பெரியாறு அணையின் கீழ் பகுதியில் எனக்கு 50 சென்ட் நிலம் கொடுத்தால், அதில் ஒரு வீட்டை கட்டி வாழ்ந்திருப்பேன்.’’ என கூறியதைத்தான் பதிலாக தர வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்று 1979ல் ஆரம்பித்த விஷம பிரசாரங்கள் கேரளாவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் வந்து பெரியாறு அணையை குறித்து விதவிதமாக கதைகளை சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக எழுப்பப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெரியாறு அணை இன்னமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. அறிவியல் பூர்வமாக பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று சேவ் கேரளா பிரிகேட் அமைப்பை நடத்தி வரும் வழக்கறிஞர் ரசல்ஜோயுடன் விவாதிக்க தமிழக விவசாயிகள் தயாராக உள்ளோம்.

ஆனால் தங்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பெரியாறு அணைப் பிரச்னையை கேரளத்து அரசியல்வாதிகளும், யூடியூபர்களும் ஊதி பெரிதாக்குகிறார்கள். இந்த நடவடிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று தெரிந்தும், சேவ் கேரளா பிரிகேட் அமைப்பின் தலைவர் ரசல்ஜோய் உள்ளிட்ட சில யூ டியூபர்கள், தொடர்ந்து இந்த வேலையை செய்து வருகின்றனர்.

இரண்டு மாநில உறவை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இவர்களால், தமிழக கேரள எல்லையில் மோதல் நிகழக் கூடும் என்கிற அச்சம் இருக்கிறது. எனவே, இது போன்ற விஷம பிரசாரங்களை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை பீதிக்கு உள்ளாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வரை தொடர்பு கொண்டு இது போன்ற சமூக வலைதளங்களில் பெரியாறு அணை குறித்து தவறான வகையில் பிரசாரம் செய்து வருபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும், என்றார்.

The post பெரியாறு அணை குறித்து சமூக வலைதளங்களில் கூகுள் மேப் படத்துடன் விஷமப்பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Periyar Dam ,Tamil Nadu ,Gudalur ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...