×

நீலகிரி வன கோட்டம் சார்பில் வன உயிரின வார விழிப்புணர்வு

ஊட்டி : நீலகிரி வன கோட்டம் சார்பில் வனஉயிரின வார விழா விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நடந்தது. இதில் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
வன உயிரினங்களின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 2ம்தேதி முதல் 8ம் தேதி வரை நாடு முழுவதும் வனஉயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையை பாதுகாக்கவும்,விலங்குகள் மற்றும் காடுகளை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இவ்விழா ஒரு வார காலம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

நடப்பு வன உயிரின வார விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீலகிரி வன கோட்டம் சார்பில் ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே துவங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம், வனங்களையும், விலங்குகள், பறவைகளை பாதுகாப்பதால் ஏற்படும் நன்மைகள்,அழியும் பட்டியலில் உள்ள விலங்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி பேரணியாக சென்றனர்.இப்பேரணி ஊட்டி அரசு கலை கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் மற்றும் வனச்சரகர்கள்,வன ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா உத்தரவின் பேரில் தெப்பகாடு யானைகள் முகாமில் வன உயிரின வார விழா நிகழ்ச்சி நடந்தது.முகாமிற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மத்தியில் பேசிய வனத்துறையினர், கடந்த 1957ம் ஆண்டு முதல் இந்திய வன உயிரின வாரிய ஆலோசனையின் வன உயிரின வார விழா கடைபிடிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டு யானைகள் திருவிழா என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

யானைகளின் சிறப்பம்சம், காடுகளில் யானைகளின் முக்கியத்துவம், யானைகளின் பழக்க வழக்கங்கள், யானைகளால் நமக்கு கிடைக்கும் நன்மைகள், யானைகள் வலசையின் முக்கியதத்துவம், யானைகளின் தாய்பாசம் ஆகியவை விரிவாக தெரிவிக்கப்பட்டது. தெப்பக்காடு யானைகள் முகாம் தமிழகத்தில் உள்ள யானைகளைப் பாதுகாக்கும் அரணாக செயல்பட்டு வருகிறது என விளக்கப்பட்டது. வன பாதுகாப்பு குறித்து 16 உறுதிமொழிகள் எழுதப்பட்ட குலுக்கல் நிகழ்வு நடந்தது. இதனை தேர்வு செய்த சுற்றுலா பயணிகள் பறவைகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம், வன பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என உறுதியளித்தனர்.

கோத்தகிரி: கோத்தகிரியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கோத்தகிரி கட்டபெட்டு வனசரகத்தில் வன உயிரின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக கட்டபெட்டுவன சரகர் செல்வகுமார் தலைமையில் கட்டபெட்டு அரசு பள்ளியில் கொண்டாடப்பட்டது. அரசு பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியானது பேருந்து நிலையம் வரை தொடர்ந்து மீண்டும் பள்ளியில் முடிவடைந்ததுஇந்த பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் பதாதைகள் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் ஒவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

The post நீலகிரி வன கோட்டம் சார்பில் வன உயிரின வார விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Forest Biome Week Awareness ,Nilgiri Forest Group ,Feeder: ,Wildlife Week Festival Awareness Rally ,Feeder ,Wildlife Awareness Week ,Dinakaraan ,
× RELATED ஊட்டியில் நாளை மலர் கண்காட்சி: ஒரு...