×

நாகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.33 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட்

*இடம் தேர்வு பணி மும்முரம்

*மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுகிறது

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாவட்டமாக இருந்த நிலை மாறி தற்பொழுது வளர்ந்து வரும் மாவட்டத்தின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை என சுற்றுலா தலங்கள் நிறைந்த இடத்தில் கடந்த 40 ஆண்டு காலத்திற்கு பின்னர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.

விழுப்புரம் – தூத்துக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை மற்றும் தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் வரையிலான இரண்டு வழிச்சாலை என சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நாகப்பட்டினம் அருகேயுள்ள காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் நிலக்கரி கனரக வாகனம் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் செல்கிறது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தை நோக்கி வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை தவிர நாகூர் அருகே மீன்வளப் பல்கலைக்கழகம், ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்வேளூர் அருகே விவசாய கல்லூரி என கல்வி சார்ந்த நிலையங்கள் பெருகியுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் தற்பொழுது நாகப்பட்டினம் அவுரித்திடல் அருகே இயங்கி வரும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் எதிர்காலத்தில் போதுமான வாகனங்கள் நிறுத்த இடமில்லை. இதனால் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து நாகப்பட்டினம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ முகம்மது ஷாநவாஸ் சட்டசபையில் கோரிக்கை விடுத்து பேசினார்.

இதையடுத்து நாகப்பட்டினத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைய கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது. இதன்பின் நகரின் வெளிப்பகுதியில் அதே நேரத்தில் பயணிகள் வந்து செல்வதற்கு வசதியாக பஸ் ஸ்டாண்ட் அமைய இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதையடுத்து கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நாகப்பட்டினம் அருகே செல்லூர் பகுதியில் பாரதிதாசன் கல்லூரியின் பின்புறம் பஸ் ஸ்டாண்ட் அமைவதற்கு தேவையான இடம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த இடத்தில் நேற்று கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைத்தால் எதிர்காலத்தில் கன மழை பெய்தால் மழை நீர் தேங்கி பாதிப்புகள் ஏற்படுத்துமா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

The post நாகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.33 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Muhammuram ,Nagapattinam ,Nagapattinam District ,Dinakaraan ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...