×

சிறுமி பலாத்கார வழக்கில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற புழல் சிறை கைதி தப்பி ஓட்டம்: தேடும் பணி தீவிரம்

அண்ணாநகர்: சிறுமி பலாத்கார வழக்கில், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்ட புழல் சிறை கைதி தப்பி ஓடினார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் ராஜா (42). கோயம்பேடு பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர், தனது அலுவலகத்தில் பணிபுரிந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் தாயார் கடந்த மே மாதம் 14ம் தேதி கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்து, பரிசோதனைக்காக அயனாவரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில், சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மகளிர் போலீசார், செந்தில்ராஜாவை போக்சோவில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

4 மாதங்களாக சிறையில் இருந்த செந்தில்ராஜாவை நேற்று டி.என்.ஏ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோயம்பேடு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அப்போது, செந்தில் ராஜா கழிவறை செல்வதாக கூறி, மருத்துவமனை கட்டிடத்தின் பின்புற சுவர் ஏறி குதித்து தப்பித்தார். இவரை பிடிக்க போலீசார் விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் செந்தில்ராஜா மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இதனையடுத்து போலீசார் செந்தில்ராஜாவை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். போலீஸ் பாதுகாப்பில் இருந்த போக்சோ வழக்கு குற்றவாளி எப்படி தப்பி சென்றார் என போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிறுமி பலாத்கார வழக்கில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற புழல் சிறை கைதி தப்பி ஓட்டம்: தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pujal ,Annanagar ,Puzhal ,Jail ,
× RELATED புழலில் பயன்பாடில்லாத வருவாய்த்துறை...