×

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் 1,244 பேருந்துகளுக்கு ரூ.23.16 லட்சம் அபராதம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: அதிக கட்டணம் வசூல் மற்றும் விதி மீறி இயக்கப்பட்ட 1,244 ஆம்னி பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.23.16 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் தொடர்ச்சியாக சோதனை நடந்து வருகிறது. அண்மையில் தொடர் விடுமுறை விடப்பட்டதையொட்டி, செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தியிருந்தது, அதிக ஒளி வீசும் முகப்பு விளக்கு பொருத்தியது, ஓட்டுநர் சீட் பெல்ட் அணியாதது, முதலுதவி பெட்டி இல்லாதது, பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டாதது, உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டது, வரி செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7,446 பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் விதிமீறி இயக்கப்பட்ட 1,244 பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு ரூ.23.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், ரூ.18.26 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டதோடு, 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் 1,244 பேருந்துகளுக்கு ரூ.23.16 லட்சம் அபராதம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Amni buses ,Transport Department ,Omni ,Amni ,Dinakaraan ,
× RELATED பழைய பஸ் பாஸிலேயே மாணவர்கள் பயணிக்கலாம்: போக்குவரத்து துறை தகவல்