×

ஆண்கள் ஹாக்கியில் அசத்தல் தங்கம் வென்ற இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்று அசத்தியது. ஏ பிரிவில் உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர், ஜப்பான், பாகிஸ்தான், வங்கதேசம் என அனைத்து அணிகளையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, அதில் பலம் வாய்ந்த தென் கொரியாவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. இந்நிலையில், நேற்று நடந்த பைனலில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. முதல் பாதியில் ஜப்பான் அணி சரிசமமாக மல்லுக்கட்ட, இடைவேளையின்போது இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியில் வேகம் பெற்ற இந்திய அணி, அடுத்தடுத்து கோல் அடித்து ஆதிக்கம் செலுத்தி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய வீரர்கள் மன்பிரீத் சிங் (25’), ஹர்மன்பிரீத் சிங் (32’, 59’), அமித் ரோகிதாஸ் (36’), அபிஷேக் (48’) ஆகியோர் கோல் அடித்தனர். ஜப்பான் தரப்பில் செரன் டனகா 51வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார்.

நடப்புத் தொடரில் இந்தியா கைப்பற்றும் 22வது தங்கம் இது. ஜப்பான் வெள்ளியுடன் திருப்தி அடைந்தது. தங்கப் பதக்கத்தை முத்தமிட்ட இந்திய அணி, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது. முன்னதாக வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் கொரியா – சீனா மோதின. அதில் கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

* தங்கம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம், அணி ஊழியர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

The post ஆண்கள் ஹாக்கியில் அசத்தல் தங்கம் வென்ற இந்திய அணி ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி appeared first on Dinakaran.

Tags : Olympics ,Hangzhou ,team ,Asian Games ,Paris Olympics ,Dinakaran ,
× RELATED குத்துச்சண்டை வீரர்களுக்கு துருக்கியில் பயிற்சி