×

வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமை விழா இன்று கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்

மதுராந்தகம்: வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை விழா கோலாகலமாக இன்று நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில் உள்ள மலை வையாவூர் கிராமத்தில் குன்றின் மீது தென்திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள மலையடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோயிலும், மலை மீது பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஆண்டாள், தாயார், சக்கரத்தாழ்வார், கருடர் உள்ளிட்ட சாமி சன்னதிகள் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3ம் சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக இக்கோயிலுக்கு சென்று மொட்டை அடித்து, முடி காணிக்கை செலுத்தி பிரசன்ன வெங்கடேச பெருமாளை வழிபட்டு செல்வர். இதேபோன்று, இந்த ஆண்டும் இக்கோயிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை விழா இன்று காலை மங்கல இசையுடன் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்க உள்ளது.

மேலும் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு வஜ்ரங்கி சேவை நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதி, செயல் அலுவலர் இரா.சரஸ்வதி, அறங்காவலர் குழு தலைவர் தினேஷ் ஏழுமலை, தலைமை அர்ச்சகர் பாலாஜி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

The post வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமை விழா இன்று கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Puratasi 3rd Saturday Festival ,Vaiyavur Prasanna ,Venkatesa Perumal Temple ,Kolakalam ,Madhurantagam ,Vaiyavur Prasanna Venkatesa Perumal Temple ,Vaiyavur Prasanna Venkatesa Perumal Temple Puratasi 3rd Saturday Festival ,
× RELATED கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய...