×

திருநாங்கூர் தெய்வநாயக பெருமாள் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருத்தேவனார்த்தொகை (திருநாங்கூர்) கிராமத்தில் உள்ளது தெய்வநாயகப்பெருமாள் கோயில். மூலவர் தெய்வ நாயகப்பெருமாள்,உற்சவர் மாதவப் பெருமாள். தாயார் கடல் மகள் நாச்சியார். துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான்.

இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது.

துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், இந்திரனே இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள் என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன்.

அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு என்றார்.

பெருமாள், இந்திரனே என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது.

இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான். திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட மகாலட்சுமியை மகாவிஷ்ணு திருமணம் செய்து கொண்டார். திருமகளை, தேவனார் (பெருமாள்) மணமுடிக்கும் காட்சியை காண தேவர்கள் தொகையாக மொத்தமாக வந்ததால் இந்த இடத்திற்கு திருத்தேவனார்த்தொகை என பெயர் ஏற்பட்டது.

அதிசயத்தின் அடிப்படையில்: கோபுர விமானம் இரண்டு தளத்துடன் அமைந்திருப்பதால்,விமானத்தின் நிழல் விமானத்திலேயே விழுமாறு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு. இத்தல பெருமாளை தரிசித்தால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

The post திருநாங்கூர் தெய்வநாயக பெருமாள் கோயில் appeared first on Dinakaran.

Tags : Tirunangur Goddess Perumal Temple ,Mayiladutura district ,Thiruvanarthokai ,Tirunangur ,Sirghazi ,Moorwar ,
× RELATED சந்தோஷ வாழ்க்கை தரும் வசியப் பொருத்தம்!