×

அண்ணா பிறந்தநாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்பந்தயம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு, அக். 6: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதவாது: செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 7ம் தேதி அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், 17 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளில் ஆண்-பெண் என இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் நாளை காலை 6 மணியளவில் துவங்குகிறது.

அதன்படி, 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் 8 கிமீ பிரிவின்கீழ் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் துவங்கி, மணப்பாக்கம் சாலை வழியாக ஒழலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சென்றடைந்து, மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்தடைய வேண்டும். 2வதாக 10 கிமீ பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் துவங்கி, மணப்பாக்கம் சாலை வழியாக ஒழலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக இ-சேவை மையம் வரை சென்று, மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்து சேர வேண்டும்.

3வதாக பெண்களுக்கான 5 கிமீ பிரிவில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி, வித்யாசாகர் கல்லூரி வளாகம் வரை சென்றடைந்து, மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் வந்தடைய வேண்டும்.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலரை நேரிலோ அல்லது 74017 03461, 99414 31589 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ₹5 ஆயிரம், 2ம் பரிசு ₹3 ஆயிரம், 3ம் பரிசு ₹2 ஆயிரம், 4ம் முதல் 10ம் பரிசு வரை ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். இதில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.

வெளி மாநிலத்தவர் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட மனுவினை வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.எனவே, வெளிமாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணா பிறந்தநாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்பந்தயம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல் appeared first on Dinakaran.

Tags : Anna ,Collector ,Rahulnath ,Chengalpattu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அண்ணா அறிவியல் மைய கோளரங்கில் பள்ளி...