×

பணத்தை திரும்ப தரக்கோரி முகவர்கள் உண்ணாவிரத போராட்டம் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு வந்தவாசியில் தீபாவளி சீட்டு நடத்தி ₹1200 கோடி மோசடி

வந்தவாசி, அக். 6: தீபாவளி சீட்டு நடத்தி ₹1200 கோடி மோசடி செய்த பணத்தை திரும்ப தரக்கோரி முகவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை தலைமையிடமாக கொண்டு விஆர்எஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளையொட்டி மாத சீட்டு பிடிக்கப்பட்டு வந்தது. மாத தவணையாக ₹300 முதல் ₹5 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. ஆண்டுக்கு ₹3 ஆயிரம் செலுத்துபவர்களுக்கு ₹10 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்களும், பட்டாசும், ஆண்டுக்கு ₹60 ஆயிரம் செலுத்துபவர்களுக்கு ₹2 லட்சம் மதிப்பில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயம், பட்டாசு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

இதனால் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணம் கட்டியுள்ளனர். ஆனால் கடந்தாண்டு கூறியபடி பொருட்கள் வழங்கவில்லை. இதனால் பணம் கட்டியவர்கள் வந்தவாசி செய்யாறில் உள்ள விஆர்எஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டதால் வருவாய் துறையினர் முன்னிலையில் வந்தவாசியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இரவில் பொருட்களை எடுத்து செல்வதாக தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் கடை முன்பாக கூடினர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவில் போலீசில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் செய்யாறில் ஒரு இடத்திலும், வந்தவாசியில் 2 இடங்களிலும் இயங்கி வந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். சுமார் ₹1200 கோடி மோசடியில் ஈடுபட்ட நிதிநிறுவனத்தின் உரிமையாளர் சம்சுமொய்தீன் பல மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் தலைமறைவான நிலையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஏற்கனவே கடந்த ஆண்டு பணத்ைத கட்டி ஏமாந்த ெபாதுமக்கள் மற்றும் முகவர்களை சந்தித்து பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என தினந்தோறும் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதனால் செய்வது அறியாமல் திகைத்த முகவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த வாரம் வந்தவாசியில் உள்ள நிதிநிறுவனத்திற்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி அனுமதியில்லாமல் கூட்டமாக வரக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று வந்தவாசி தாலுகா அலுலகம் அருகே நிதிநிறுவன முகவர்கள், பணத்தை திருப்பி பெற்று தரக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி கார்த்திக் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் சமரசம் செய்தும், சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து போராட்டம் மேற்ெகாண்டனர். அப்போது 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் மயங்கி விழுந்தனர். இவர்களை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன் மூலமாக எடுத்து சென்றனர். இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேஸ்வரன் போராட்டம் நடத்தியவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் வந்தவாசி பகுதியில் ஒரே பெயரை கொண்ட இரண்டு நபர்கள் நிதிநிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர்.

வந்தவாசி, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொத்துகளை விற்பனை செய்து பல கோடி வைத்து உள்ளனர். அந்த பணத்தை மீட்டு எங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு டிஎஸ்பி நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நீதிமன்றம் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழுப்பீடு வழங்கப்படும் என கூறினார். இதற்கு காலதாமதம் ஆகும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து அனைவரும் மாலை 4 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post பணத்தை திரும்ப தரக்கோரி முகவர்கள் உண்ணாவிரத போராட்டம் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு வந்தவாசியில் தீபாவளி சீட்டு நடத்தி ₹1200 கோடி மோசடி appeared first on Dinakaran.

Tags : Diwali Lottery ,Vandawasi ,Vandavasi ,
× RELATED பைக்குகள் மோதி காஞ்சி. மாணவன் உட்பட 3 பேர் பரிதாப பலி