×

அதிமுக பவர் இல்லாத கட்சி மக்களவை தேர்தலில் திமுக-பாஜ இடையில் தான் போட்டி: அண்ணாமலை ‘கலகல’ பேட்டி

சென்னை: அதிமுக பவர் இல்லாத கட்சி. அது பிரிந்து போனதற்கு வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜவுக்கு இடையில் தான் போட்டி என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தேசிய ஜனநாயக கூட்டணி 2024ல், பிரதமர் மோடிக்கு தமிழகத்திலிருந்து மிகப்பெரிய அளவில் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி வைக்கும். பாஜவை பொறுத்தவரை என்டிஏவை பிரதானப்படுத்தி செல்லும். 2024ல் பாஜ இங்கு மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் 2024 தேர்தலுக்கு முன்பாக தெரியும். தமிழகத்தில் 2024 தேர்தலில் வெற்றி பெற்று வரக்கூடிய வேட்பாளர்களை பார்ப்பீர்கள். வாக்கு சதவீதத்தை பார்ப்பீர்கள்.

அந்தந்த கட்சிகள் அந்த கட்சியின் வளர்ச்சியை தான் பார்க்கும். பாஜ தன்னுடைய வளர்ச்சியை பார்க்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்து சென்றதற்காக எதற்கு வருத்தப்பட வேண்டும். எதுக்கு சந்தோஷப்பட வேண்டும். என்னுடைய ஒரே நோக்கம் ‘டே ஒன்னில்’ இருந்து பாஜ வலிமை அடைய வேண்டும் என்பது தான். 2024 என்பது பிரதமர் மோடிக்கான தேர்தல். மோடி பிரதமராக வர வேண்டும் என்பதற்கான தேர்தல். 2024 தமிழகத்தில் 39க்கு 39 தொகுதிகள் மோடிக்கு தான். என் மீது பலகட்சிகள் குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அதற்கு எல்லாம் பதில் அளித்து கொண்டு இருந்தால் சரியாக இருக்காது. நான் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து அந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறேன். அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன்.

என் மீதான குற்றச்சாட்டுகள், அவதூறுகள் என்று கவலைப்பட்டது இல்லை. அதற்கான பதிலை சொன்னதில்லை. அதனால், அதிமுகவினருக்கான பதிலையும் சொல்ல வேண்டியது இல்லை. கூட்டணி விஷயத்தில் அமைதி காப்பதாக கூறுகிறார்கள். இதில் அமைதி காப்பதில் என்ன இருக்கிறது. எங்களை பொறுத்தவரை எங்கள் கட்சியை சார்ந்த பிரதமர் மோடிக்கான தேர்தல். இது எங்களுக்கான கல்யாணம். எங்களுக்கான தேர்தல். என்டிஏ வலிமையாக இருக்க வேண்டும். 2024 தேர்தலை பொறுத்தவரை பிரதமர் மோடிக்கான தேர்தல் இருக்கிறது. 2024 தேர்தல் ரிசல்ட் மட்டும் தான் இதற்கு விடை. ரிசல்ட் வராமல் யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம். கட்சி வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தார்கள் என்று கருத்து சொல்லலாம். பாஜ உள்ளாட்சி தேர்தலில் தனியாக போனதால் தான் தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக உருவாகியது.

2024 தேர்தல் முடிவு வரட்டும். மக்கள் ஆதரவு, அன்பு யாருக்கு இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். 3வது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்கான தேர்தல். தேர்தல் முடிவுகள் பாஜவுக்கும், தேசிய ஜனநாய கூட்டணிக்கும் ஆதரவாக தான் இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவா, பாஜவா என்பது தான் சவால். டெல்லியில் பாஜ ஆளுங்கட்சியாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. இரண்டு பேருக்கும் தான் போட்டி. இதை தேர்தலில் பார்க்கலாம். அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று யாரும் சொல்லவே இல்லை. வி.பி.துரைசாமி கூறிய கருத்தை தவறாக புரிந்து கொண்டு போட்டுள்ளார்கள். எங்கள் சண்டை என்பது திமுகவோடு தான். மற்ற கட்சிகளிடம் பவர் இல்லை. அவர்களிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் பாஜவை பொறுத்தவரை 2 ஆண்டுகளாக கட்சி அடிப்படையில் பலம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக பவர் இல்லாத கட்சி மக்களவை தேர்தலில் திமுக-பாஜ இடையில் தான் போட்டி: அண்ணாமலை ‘கலகல’ பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Lok Sabha ,DMK ,BJP ,Annamalai 'Kalagala ,CHENNAI ,BJ ,Lok ,Sabha ,Annamalai 'Kalakala ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...