×

சென்னை விஐடியில் தொழில் நுட்ப திருவிழா தொடக்கம்

திருப்போரூர்: சென்னை விஐடியில் ‘டெக்னோ விஐடி-23’ என்ற தொழில் நுட்ப திருவிழா நேற்று தொடங்கியது. இது, நாளையுடன் முடிவடைகிறது. இதில், சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் கீழ் இயங்கும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் குழு இயக்குநர் ஜெயந்தி ராஜேஷ், கவுரவ விருந்தினராக வேர்ல்ட் லைன் குளோபல் நிறுவனத்தின் மனித வள மேலாண்மையின் மூத்த உதவி தலைவர் ஜோஷ்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ‘டெக்னோ விஐடி-23’ யை தொடங்கி வைத்தனர்.
பின்னர், சிறப்பு விருந்தினர் ஜெயந்தி ராஜேஷ் பேசுகையில், ‘இஸ்ரோ 34 நாடுகளுடன் இணைந்து இதுவரை 424 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

260 திட்டங்கள் இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் சந்திராயன்-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதைதொடர்ந்து, சூரியன் ஆய்வு செய்வதற்காக ஆதித்யா என்னும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. எதிர்காலத்தில் மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காகவும், விண்வெளி சார்ந்த ஆய்வுக்காகவும் இஸ்ரோ தொடர்ந்து பணியாற்றி வருகிறது” என்றார். கவுரவ விருந்தினர் ஜோஷ் ராஜ் பேசுகையில், ‘இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு, மாணவர்கள் தங்களுடைய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கான பணிகளை விஐடி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது’ என்றார். தொழில்நுட்ப திருவிழாவின் முதல் நாளான நேற்று ட்ரோன் நிகழ்ச்சி, ரோபோ ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நாடு முழுவதும் இருந்து முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் மலேசியா, கம்போடியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் என முதல் நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் தொழில்நுட்ப நிகழ்வுகளை கண்டு ரசித்தனர்.

தொழில்நுட்பம் சார்ந்த இவ்விழாவில் 250க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், முனைவர் சேகர் விசுவநாதன், சென்னை விஐடி இணை துணை வேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

The post சென்னை விஐடியில் தொழில் நுட்ப திருவிழா தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai VIT ,Tirupporur ,Techno VIT-23 ,Dinakaran ,
× RELATED தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து...