×

தமிழ்நாட்டில் சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஒன்றாக இணைந்து செயல்படும்: காமன்வெல்த் மாநாட்டு கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை தெரிவித்தார். கானா நாட்டின் தலைநகர் அக்ரா நகரத்தில் நேற்று முன்தினம் (4ம் தேதி) நடந்த 66வது காமன்வெல்த் பாராளுமன்ற சங்க மாநாட்டின் கருத்தரங்கில் தமிழ்நாடு கிளையின் பிரதிநிதியாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டு பேசியதாவது: 2003ம் ஆண்டு சட்டமன்றம், நீதிமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அதிகார பகிர்வுகள் மற்றும் ஊடுருவல்கள் குறித்து லாடிமர் ஹவுஸ் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது.

அதிலிருந்து, பல காமன்வெல்த் நாடுகளில் அதிகார பகிர்வுகளை உறுதிப்படுத்துவதிலும், நல்லாட்சியை மேம்படுத்துவதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், காமன்வெல்த் நாடுகள் பலவற்றிலும், இக்கோட்பாடுகளை கடைபிடிப்பதில் பல்வேறு சவால்கள் மற்றும் தடைகள் நீடிக்கின்றன. தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக பொறுப்பேற்று, செம்மையாக ஆட்சி செய்து, தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில், திறமையான நிர்வாகத்தை வழங்கி, தமிழக முன்னேற்றத்திற்கான வளர்ச்சி பணிகளை நாள்தோறும் வழங்கிவரும்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில், தமிழக சட்டமன்ற பேரவை நடவடிக்கைகளில் லாட்டிமர் ஹவுஸ் கோட்பாடுகளை கடைபிடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படும் என உறுதியாக நம்புகிறேன்.இந்த மாநாட்டில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாட்டில் சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம் ஒன்றாக இணைந்து செயல்படும்: காமன்வெல்த் மாநாட்டு கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Speaker ,Abau Hope ,Commonwealth Conference ,Chennai ,Commonwealth Conference Seminar ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...