×

ஒருங்கிணைந்த பண்ணை… அடுக்கு முறை சாகுபடி…

மணிவண்ணனின் 3 ஏக்கர் நிலம் ஒரு பசுமை தீவு போல் இருக்கிறது. மற்ற விவசாயிகளைப் போல உளுந்து, வேர்க்கடலை என பயிரிட்டு வந்த இவர் மெல்ல மெல்ல விவசாயத்தின் சூட்சுமம் அறிந்து தனது நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றி இருக்கிறார். இதில் பழ மரங்கள், டிம்பர் வேல்யூ மரங்கள், காய்கறிகள் என சாகுபடி செய்வதோடு, காங்கேயம் மாடு, மீன், நாட்டுக்கோழி என கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இதில் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்தி வருகிறார். பண்ணையின் சூழல் பிடித்துப்போய், அங்கேயே வீடு கட்டி இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு காலைப்பொழுதில் மணிவண்ணனைச் சந்தித்தோம்.
“பாரம்பரிய விவசாயக் குடும்பம் எங்களுடையது. அப்பா நல்ல விவசாயி. நான் சிறுவயதில் இருக்கும்போதே அப்பா இறந்துவிட்டார். இதனால் எனது அண்ணனும், நானும் அப்பா பார்த்து வந்த விவசாயத் தொழிலில் இறங்கி விட்டோம். விவசாயத்தில் ஆரம்பக்கட்டம் அதுதான். பெரிதளவில் அனுபவம் இல்லை என்பதால் ஆரம்பமே நஷ்டம்தான். இருந்தாலும் நான் விவசாயத்தை விடுவதாக இல்லை. கொஞ்ச காலம் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு சென்றாலும் விவசாயம்தான் எனக்கு ஆதாரம் என்பதை தெரிந்து மீண்டும் விவசாயத்தைத் தொடங்கினேன்.

அதன்பிறகு, வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டேன். அதில், பெரிய வருமானம் கிடைக்கவில்லை. ஆனால், விவசாயத்தை தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். அதில் ஒரு பகுதியாக மல்லி, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்தேன். இதன்மூலம் மாதம் ₹40 முதல் ₹50 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விவசாயத்தில் வருமானம் பார்க்கும் சூட்சுமத்தைக் கற்றுக்கொண்டேன். விவசாயத்தை பொறுத்தவரை குறைந்த செலவில் நிறைந்த வருமானம் பார்த்தால்தான் வருங்காலத்தில் வெற்றி அடைய முடியும் என யோசித்தேன். அதே சமயம் இயற்கைமுறை விவசாயம்தான் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடனும் இருந்தேன். அதனால் எனது நிலத்தை ஒருங்கிணைந்த பண்ணையமாக மாற்ற முடிவுசெய்து கடந்த 15 வருடங்களாக எனது பண்ணையை உருவாக்கி வந்திருக்கிறேன்.இந்தப் பண்ணையில் மரங்கள், செடிகள், கொடிகள், காய்கறிகள், மூலிகைச் செடிகள், அல்லி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் என அனைத்தையும் செய்து வருகிறேன். 15 வருடங்களாக உருவாக்கிய பண்ணையில் சில வருடங்களாக வருமானம் பார்த்தும் வருகிறேன். இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் நோக்கமே குறைந்த செலவில் வருமானம் பார்க்கவேண்டும் என்பதுதான். ஏனெனில், விவசாயத்திற்கு அதிகம் செலவழித்து நஷ்டம் வரும்போது விவசாயத்தை விட்டு வெளியே செல்லும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் பண்ணையத்தை உருவாக்கினால் குறைந்த முதலீட்டில் வருடம் முழுவதும் வருமானம் பார்த்து வரலாம். அதைத்தான் நானும் செய்தேன்.

இந்தப் பண்ணையில் பழம் தரக்கூடிய மரங்களான 50 மாமரங்கள் இருக்கின்றன. சாத்துக்குடி மரங்கள் 100 இருக்கின்றன. எலுமிச்சை 200
மரங்களும், பெரு நெல்லி 100 மரங்களும், அத்தி, சப்போட்டா, செர்ரி, ஸ்வீட் லெமன், செவ்வாழை, தென்னை, நாவல், சீத்தாப்பழம் என அனைத்து வகையான பழமரங்களும் வளர்த்து வருகிறேன். ஒவ்வொரு சீசனுக்கும் தகுந்தபடி ஒவ்வொரு மரத்தில் இருந்தும் பழங்கள் கிடைக்கின்றன. அதேபோல காய்கறிகளில் இஞ்சி, கொடி உருளை, வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகாய், வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி, பாகற்காய், முருங்கைக்காய் என பல வகைகளை பயிர் செய்கிறேன். மூலிகை மரங்களில் சித்தரட்டை, பேரரட்டை, கருமஞ்சள், வெள்ளை மஞ்சள், மஞ்சள், திப்பிலி, வெற்றிலை, மாயன் கீரை, கருந்துளசி, ஆடா தோடா, வெட்டிவேர், எலுமிச்சை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, வல்லாரை போன்ற செடிகளும் இங்கு உள்ளன. இத்தனை வகையான மரங்கள், காய்கறிகளை அடுக்கு முறையில் பயிரிட்டு இருக்கிறேன். இந்த முறை விவசாயத்தில் மகசூல் முக்கியமில்லை. மண்ணை பல அடுக்கு விவசாயத்திற்கு பழக்குவதுதான் முக்கியம். எனக்குத் தேவையான உரங்களை நானே தயார் செய்வதாலும், மண்புழு உரம், பழக்கரைசல், ஜீவாமிர்தம் போன்றவற்றை நானே தயாரித்து மரங்களுக்கு தெளிப்பதால் இந்த முறை விவசாயத்திற்கு செலவும் குறைவுதான்.

இயற்கை முறையில் சாகுபடி செய்த சாத்துக்குடி, எலுமிச்சை உள்ளிட்ட அனைத்து பழங்களையும் ஐதராபாத், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்தேன். வியாபாரிகள் குறைந்த விலைக்கு பழங்களை எடுப்பதால், ஏற்றுமதியை நிறுத்திவிட்டு, இயற்கையான முறையில் விளைந்த பழங்கள், காய்கறிகளை குறைந்த விலையில் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினேன். ஆரணி மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் அதிகளவில் தாங்களாகவே, எனது நிலத்திற்கு வந்து காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்த நேரடி விற்பனை முறையால் லாபம் இப்போது அதிகரித்திருக்கிறது. பிசிஏ முடித்துவிட்டு எனது மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவருக்கும் இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு வந்திருக்கிறது. அவரைப்போலவே எனது மனைவி, மருமகள் ஆகியோருக்கும் இதில் ஈடுபாடு ஏற்பட்டு விவசாயம் செய்ய வந்திருக்கிறார்கள். இதனால் இங்கேயே வீடு கட்டி, அனைவரும் தங்கி இயற்கை விவசாயம் செய்கிறோம். இதனால் மேலும் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

மரங்களுக்கு அடுத்தபடியாக, பண்ணையில் பன்னீர் ரோஸ், வெள்ளை தாமரை, ரோஸ் தாமரை, வண்ணத் தாமரைகள், மூக்குத்தி ரோஸ், தாழம்பூ, செண்பகம், மனோரஞ்சிதம், பாரிஜாதம், கிருஷ்ண கமலம், மதுகாமணி, விரிச்சி போன்றவற்றையும் வளர்த்து வருகிறேன். இந்தப் பூக்கள் மட்டும்தான் சந்தை விற்பனைக்கு செல்லும். தோட்டத்தைச் சுற்றி தேக்கு, வேம்பு, மலைவேம்பு, பூந்தேக்கு, மூங்கில், புளி உள்ளிட்ட மரங்களும் கூட இருக்கின்றன. இந்த பண்ணைக்கென்று நான் செலவழிக்கும் பணம் மாதம் ஐந்தாயிரம் தான். அதுவும் தொழுவுரம் வாங்குவதற்கும், கவாத்து பணி செய்வதற்காக வெளி ஆட்களின் சம்பளத்திற்கும். மத்தபடி இந்த பண்ணையில் இருந்து மாதம் ரூ.40 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. தண்ணீர் விடுவது, மருந்து தெளிப்பது, உரம் இடுவது என தினசரி பணிகளை நாங்களே கவனித்து வருவதால் இந்தளவு வருமானம் பார்க்க முடிகிறது. இயற்கைமுறை விவசாயத்தைப் பொறுத்தவரை பூச்சித்தொல்லையோ, நோய்தாக்குதலோ குறைவுதான். ஏனெனில், இங்கு இருக்கிற மரம், செடிகளுக்கு தேவையான நேரத்தில் இயற்கை உரம் கொடுப்பதும், தோட்டத்தில் ஆங்காங்கே இனக்கவர்ச்சிபொறி இருப்பதும்தான். இவை எல்லாம் போக காங்கேயம் பசுக்கள், பங்களா வாத்து, மணி வாத்து, கோழிகள், புறா, மீன் உள்ளிட்டவைகளும் வளர்த்து வருகிறேன். குறைந்த முதலீட்டில் வருமானம் பார்ப்பதற்கு இந்த முறை விவசாயம்தான் கைகொடுக்கும்’’ என்று ஆணித்தரமாக பேசுகிறார்
மணிவண்ணன்.
தொடர்புக்கு:
மணிவண்ணன்: 93610 53327

The post ஒருங்கிணைந்த பண்ணை… அடுக்கு முறை சாகுபடி… appeared first on Dinakaran.

Tags : Manivannan ,Dinakaran ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...