×

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது குண்டு வீசி கொல்ல முயன்ற 3 பேருக்கு ஆயுள்: 19 ஆண்டுகளுக்கு பின் நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு

நெல்லை:  நெல்லை கோர்ட் அருகே கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணசாமி கார் மீது குண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் தோட்ட மேலாளர் அந்தோணிமுத்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் புதிய தமிழகம் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நெல்லை முதலாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி 26-7-2004 அன்று ஆஜரானார். பின்னர் அவர் தனது காரில் ஆதரவாளர்களுடன் மதிய உணவுக்காக திருச்செந்தூர் சாலையில் பயணித்தார்.

அப்போது பைக் உள்ளிட்ட வாகனங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென கிருஷ்ணசாமியின் வாகனம் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் காரின் முன்பகுதி சிதைந்தது. இதில் அவரது முகம், கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் சிவபெருமாள், வேலுச்சாமி ஆகியோரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து பாளை. போலீசார் கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ராமையன்பட்டியில் நடந்த பஞ். தலைவர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கிருஷ்ணசாமி ஆதரவாக செயல்பட்டதாக கருதி அவரை கொல்ல முயன்றதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த சிவா என்ற சிவலிங்கம், தங்கவேல், லெட்சுமணன், முத்துப்பாண்டி, செண்பகம் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை வன்கொடுமை தடுப்பு 2வது அமர்வு கோர்ட்டில் 19 ஆண்டுகளாக நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பத்மநாபன், சிவா என்ற சிவலிங்கம், தங்கவேல், லெட்சுமணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4,500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். வழக்கு நடந்த போதே சங்கர், திரவியம் மற்றும் மதன் ஆகியோர் இறந்து விட்டனர். மற்ற 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

The post புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது குண்டு வீசி கொல்ல முயன்ற 3 பேருக்கு ஆயுள்: 19 ஆண்டுகளுக்கு பின் நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu party ,Krishnasami ,Paddy ,Kṛṣṇa ,Paddy Court ,
× RELATED தென்காசி அருகே புதிய தமிழகம்...