×

‘எல்லாம் முடிஞ்சு போச்சு…’ அண்ணாமலை இல்லாமல் நிர்வாகிகள் கூட்டம் நடத்தலாம்: வானதி சீனிவாசன் பேட்டியால் பரபரப்பு

கோவை: ‘எல்லாம் முடிஞ்சு போச்சு… அண்ணாமலை இல்லாமல் நிர்வாகிகள் கூட்டம் நடத்தலாம்’ என்று வானதி சீனிவாசன் அளித்துள்ள பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு விமானம் மூலம் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை பீளமேடு விமான நிலையத்தில் பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வழியனுப்பி வைத்தார். பின்னர், வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் முழுக்க முழுக்க தொகுதி பிரச்னைகளுக்காகவே நிதியமைச்சரை சந்தித்தனர். கூட்டணி முறிவு குறித்து பேசுவதற்கு இல்லை. இது அரசு நிகழ்வு என்பதால் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

கோவையில் சிட்பி வங்கி கல்வெட்டில் தமிழ் மொழி இல்லாதது குறித்து நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். எந்த ஊரில் வங்கி திறந்தாலும் அந்த ஊரில் உள்ள மொழி கல்வெட்டில் இடம் பெற வேண்டும் என நிதி அமைச்சர் வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படவில்லை. கல்லூரியின் நிகழ்ச்சி நிரலை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம். காலையில் இருந்து தொடர்ச்சியான நிகழ்வுகளில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. கோவையில் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றதால் நிதியமைச்சர் மகிழ்வாக இருந்தார்.

அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை. தனிப்பட்ட நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. அவர், கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார். சென்னையில் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதா? என்பது குறித்து தெரியவில்லை. மாநிலத்தலைவர் (அண்ணாமலை) இல்லாமல் அமைப்பு செயலாளர் தலைமையில் கோட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ‘அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம்’ என்று பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வானதி சீனிவாசன், ‘எல்லாம் முடிஞ்சு போச்சு…’ என பதிலளித்தவாறு சென்றார்.

The post ‘எல்லாம் முடிஞ்சு போச்சு…’ அண்ணாமலை இல்லாமல் நிர்வாகிகள் கூட்டம் நடத்தலாம்: வானதி சீனிவாசன் பேட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Vanathi Srinivasan ,Coimbatore ,
× RELATED ரூ,1000 + ரூ,180 ஜிஎஸ்டி...