×

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு மாஜி அதிமுக எம்எல்ஏ பொதுக்கூட்டம் கூட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட் அதிரடி நிபந்தனை

சென்னை: ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியது குறித்து பொதுக் கூட்டம் கூட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு’’ சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளருமான குமரகுரு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தினர் அவதூறு பரப்புதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி குமரகுரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், தனது பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரிய பிறகும், அரசியல் உள் நோக்கத்தோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசிவிட்டு சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது. எனவே, காவல்துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு மாஜி அதிமுக எம்எல்ஏ பொதுக்கூட்டம் கூட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட் அதிரடி நிபந்தனை appeared first on Dinakaran.

Tags : Stalin ,Minister ,Udayanidhi Maji ,MLA General Meeting ,Uddanythi ,Udayanidhi ,Maji Amuga ,MLA General Assembly ,Dinakaraan ,
× RELATED பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த...