×

இலை கட்சியில் பிளவை தடுக்க அணிகளை உருவாக்கி பிரச்னையில் இருந்து தப்பிய சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தே னிக்காரரை காலி செய்ய எந்த நிலைக்கும் போகும் அளவுக்கு உள்ள கட்சி தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலம்காரர் கட்டுப்பாட்டில் இலைக்கட்சி வந்தபோதும், ஹனிபீ மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து தேனிக்காரரின் தீவிர ஆதரவாளரே மாவட்ட தலைமை பொறுப்பில் இருந்து வந்தாராம். இவரை மாற்ற வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை எழுந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிர்வாகிகள் நியமனத்தின்போது அவரை தூக்கிட்டாங்க. தற்போது மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கிழக்கிற்கு முறுக்கிக் கொள்பவரையும், மேற்குக்கு ‘ஜ’வில் தொடங்கும் ஐந்தெழுத்துக்காரரையும் நியமிச்சாங்க. இதுல கிழக்கு மாவட்டத்துக்கு தலைமையானவர் தேனிக்காரருக்கு தீவிர ஆதரவாளராக இருந்தவராம். அவரின் சிபாரிசால்தான் ஏற்கனவே அவருக்கு எம்பி தேர்தலில் சீட்டும் கிடைத்தது. மறுபக்கம் மேற்குகாரரோ துவக்கத்தில் தேனிக்காரர், பின் சேலத்துக்காரரின் தீவிர ஆதரவாளராக மாறினாராம். இவர்களின் நியமனத்தால் முன்னாள் எம்பியான வித்தியாச பட இயக்குநர் பெயர் கொண்டவரும், வக்கீலான ராதையின் கணவர் பெயரை கொண்ட குமாரரும் கடும் டென்ஷனில் இருக்காங்க. காரணம், இருவரும் மாவட்ட தலைமை பொறுப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில் பணத்தை தண்ணீராக செலவு செய்தாங்க. பொதுக்கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது, போராட்டங்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஏற்று நடத்துவது என கடும் உழைப்பை வெளிப்படுத்தியிருந்தாங்க. ஆனாலும், கட்சிப்பணிகளில் பெரிய அளவில் தீவிரம் காட்டாதவர்களுக்கு பதவி, உழைத்தவர்களுக்கு பதவி இல்லையா என பார்ப்பவர்களிடம் பேசி புது கோஷ்டியை உருவாக்கி வருகிறாராம். இவர்களை சரிக்கட்டி சமாதானப்படுத்தும் வேலையில் இலைக்கட்சி தலைமை இறங்கி இருந்தாலும், இவர்களது அதிருப்தியை அறிந்து தேனிக்காரர் தரப்பு, தன் பக்கம் வாங்க, நீங்க கேட்கிற பொறுப்பு, கரன்சியை சேர்த்து தருகிறோம் என்று அவர்களுக்கு தூது விட்டிருக்கிறதாம். பழைய பாசத்தில் செல்லாமல் தடுக்க சேலம்காரர் வேறு பதவியை கொடுக்கிறேன் என்று சொல்லி உள்ளாராம். இதனால தேனி மாவட்டத்துல இலை கட்சியில நிர்வாகிகள் இடம் பெயர்ச்சி சற்று தள்ளி போயிருக்கிறது…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எந்த முயற்சி செய்தாலும் ‘பெயில்’ ஆவது எப்படி என்று இலை கட்சியின் எந்த மாஜி முதல்வர் புலம்புகிறார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியுடன் கூட்டணி இல்லை என்று சேலத்துக்காரர் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்தார். சேலம்காரரின் இந்த அறிவிப்பால் மன்னர், மனுநீதி சோழன், கடலோர உள்ளிட்ட டெல்டாவில் உள்ள மாஜி அமைச்சர்கள் மாற்று திட்டத்துக்கு தயாராகிட்டாங்க. அதாவது, டெல்லியை பகைத்து கொண்டால் 10 வருட ஆட்சியில் சேர்த்துள்ள சொத்துக்களை காப்பாற்றுவதுதான் அவர்களின் முதல் திட்டமாம். சேலம்காரர் மீது கடும் கோபத்தில் இருந்து வரும் டெல்லி மேலிடம் திடீரென நம் மீது கோபம் திரும்பி திடீரென ரெய்டு நடத்தினால் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று ஒரு குரூப்பாக சேர்ந்து டிஸ்கஷன் நடத்தி இருக்காங்க… அப்போது இலை கட்சியின் சில மாஜி அமைச்சர்கள் தேர்தல் தொடர்பான கூட்டணி அறிவிப்பு வரை அமைதி காப்போம். நம்ம பேச்சுல தாமரையை பற்றி எதுவும் பேச வேண்டாம். பொதுக்கூட்டத்துல மற்ற கட்சிகளை ‘அட்டாக்’ ெசய்யலாம் என்று முடிவுக்கு வந்திருக்காங்களாம். இப்படியே போனால் தாமரை கட்சிக்கு இலை கட்சியின் மாஜி அமைச்சர்கள் தாவி விடுவாங்க என்ற அச்சத்தில் இருக்காங்களாம். இந்த பிரச்னையை சேலம் தலைவருக்கு பாஸ் செய்து இருக்காங்களாம்.. சேலம் குரூப்பில் எழுந்த பிரச்னையை நன்றாக பயன்படுத்திக்கொள்ள தேனிக்காரர் மற்றும் குக்கர் தலைவர் இணைந்து டெல்டாவில் சேலம்காரர் மீது அதிருப்தியில் உள்ளவர்களை சந்திக்க திட்டம் போட்டிருக்காங்களாம். இதற்காக, தேனிக்காரர் தனி டீம் ஒன்றை ‘பார்ம்’ பண்ணியிருக்காராம். இந்த டீம், அதிருப்தி மாஜி அமைச்சர்களை நேரில் தனித்தனியாக சந்தித்து அவர்களை இழுப்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்காங்களாம். அதுவும் ரகசியமாக தான் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாம். ஏறக்குறைய அது பாதி சக்ஸஸ் மீதி தோல்வி என்பதுபோல தான் இருந்ததாம். இந்நிலையில், சேலத்துக்காரர் அணியில் இணைந்த பிறகு சைலண்டாக இருந்து வரும் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவும் தேனிக்காரர் டீம் தனி திட்டம் வைச்சிருக்காங்களாம். இது தனி அசைன்மென்ட் என்கிறார்கள். இந்த தகவல் தெரிய வந்து உச்சகட்ட டென்ஷனுக்கு சென்ற சேலம்காரர், தங்கள் பக்கம் உள்ள மாஜி அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளை தக்க வைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக களம் இறங்கி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஏற்கனவே அடிக்கடி வர மழையில ஜூரம் வருது, இதுலேயும் வசூல் மழையில நனையும் பதிவு அதிகாரி பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல 2 எழுத்து இனிஷியல் உள்ள குப்பம் தாலுகாவுல பதிவு அலுவலகம் இருக்கு. இந்த அலுவலகத்துல லேடி அதிகாரி ஒருத்தர் 6 வருஷமா இருக்காங்களாம். இந்த 6 வருஷத்துல இடையில இன்னொரு அதிகாரிய நியமிச்சாங்களாம். ஆனா திரும்பவும் பவரை பயன்படுத்தி லேடி அதிகாரி அந்த ஏரியாவுக்கே வந்துட்டாங்களாம். இவருக்கு அந்த ஆபிஸ்ல ஒரு ஓஏ இருந்தாராம். அவரோட நேரடி கண்காணிப்புல தான் வேட்டை நடந்ததாம். அவரு இப்ப ெவயிலூர் தலைமை ஆபிஸ்ல இருக்காராம். பணியிடமாறியும் ஏற்கனவே இருந்த இடத்துல ஓஏவின் பவர் மாறவில்லையாம். இப்பவும் அவர் சொல்ற ஆவணம் தான் பதிவு ஆகுதாம். பதிவு செய்ய யாராவது வந்தா.. தலைமை ஆபிஸ்ல இருக்குற அந்த ஓஏவை கேட்டுட்டு வான்னு லேடி அதிகாரி சொல்றாங்களாம். கொடுக்க வேண்டியத கொடுக்காம எந்த பதிவும் நடக்குறதில்லையாம். அதிகாரியும், ஓஏவும் வசூல் மழையில நனையுறாங்களாம். யாராவது எதிர்த்து கேட்டா… என்னை ஒன்றும் செய்யமுடியாது. டிரான்ஸ்பரே கிடைச்சாலும், இதே ஊர்ல தான் இருப்பேன்னு அதிரடிக்கிறாங்களாம். உயர் அதிகாரிங்க ஆய்வு செஞ்சி நடவடிக்கை எடுக்கணும்னு பாதிக்கப்பட்ட ஜனங்க பாவம் புலம்புறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சியில் பிளவை தடுக்க அணிகளை உருவாக்கி பிரச்னையில் இருந்து தப்பிய சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salemkar ,wiki ,De Nikkar ,Peter ,Salamkarar ,Yananda ,
× RELATED எம்பி தேர்தல் நடக்க இருக்கும்...