×

தெளிவு பெறு ஓம்: ஏன் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஏன் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்?
– நித்யா, சேலம்.

பதில்: சுந்தர காண்டத்திற்கு ஏன் சுந்தர காண்டம் என்று பெயர் வந்தது என்பதற்கு பெரியவர்கள் பல பொருத்தமான காரணங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். ராமாயணத்தில், சுந்தர காண்டத்தைத் தவிர மற்ற காண்டங்களுக்கெல்லாம் பெயரிட வெளிப்படையான காரணம் இருந்தது. உதாரணமாக, ராமரின் இளமைக்கால நிகழ்ச்சிகளை விவரிப்பது பால காண்டம். அயோத்தியில் நடைபெறும் நிகழ்சிகளை விவரிப்பது அயோத்தியா காண்டம்.

காட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளை விவரிப்பது ஆரண்யா காண்டம். கிஷ்கிந்தையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை விளக்குவது கிஷ்கிந்தா காண்டம். நிறைவாக யுத்த நிகழ்ச்சிகளை விவரிப்பது யுத்த காண்டம். அனுமன் சீதையைத்தேடிச் சென்ற காண்டம் அனுமன் காண்டம் என்றிருக்க வேண்டும். ஆனால், சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார்கள். ஏன் என்று பார்க்க வேண்டும்.

அனுமனுக்கு சுந்தரன் என்று பெயர். சீதைக்கு சுந்தரி என்று பெயர். ராமனுக்கு சுந்தரன் என்று பெயர். இலங்கைக்கு சுந்தரமான பட்டினம் என்று பெயர்.
வான்மீகி பகவான் கேட்கிறார்;

“சுந்தர காண்டத்தில் எது சுந்தரமாக இல்லை?

எல்லாமே சுந்தரம்தான்” எனவே சுந்தர காண்டம் என்று பெயர் வைத்தார்கள். சுந்தர காண்டத்திற்கு இன்னொரு பெயரும் உண்டு. `நஷ்ட ஜாதகம்’ என்றொரு பெயர் இந்த காண்டத்திற்கு உண்டு. காரணம் என்ன தெரியுமா? ஒரு மிகப் பெரிய செயலில் ஆஞ்சநேயர் வெற்றி பெற்ற கண்டம் சுந்தர காண்டம்.சீதை எங்கே இருக்கிறார் என்று அறிய முடியாத ராமன், சோகத்திலும் ஆற்றாமையிலும் தவித்து இருந்தார். சீதையும் ராமன் நிலை அறியாது, தன் துன்பம் இனி தீராது என முடிவெடுத்து, தற்கொலைக்கே முயன்றாள்.

பின், அனுமனால் முடிவை மாற்றிக் கொள்கிறாள். ராமனை இழந்த சீதையின் நஷ்டத்தையும், சீதையை இழந்த ராமனின் நஷ்டத்தையும் ஆஞ்சநேயர், தன் பயணத்தால் போக்கிய காண்டம் இது. ராமனைத் தெரிந்து கொண்டதால் சீதை மனதும், சீதையின் கற்பின் நலத்தைத் தெரிந்து கொண்டதால் ராமனின் மனதும் குழப்பம் நீங்கி சுந்தரம் அடைந்ததால் சுந்தர காண்டம் என்று பெயர். இது தவிர, ஜனன மரணத்தை போக்குவதும், எந்த நாமத்தைச் சொன்னால் சகஸ்ரநாமத்தைச் சொன்ன பலன் கிடைக்குமோ, அந்த நாமத்தின் பெருமையை ஆஞ்சநேயர் சீதைக்குச் சொன்ன காண்டம் இது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்
எனவேதான், எந்தக் கஷ்டம் வந்தாலும், அது நீங்கிட சுந்தர காண்டத்தைப்
பாராயணம் செய்கிறார்கள்.

? ஏன் குருவைப் பற்ற வேண்டும்?
– ராஜ்குமாரன், தர்மபுரி.

பதில்: குருவருள் இலை என்றால் திருவருள் இல்லை. குருவின் துணையின்றி பிறவிப் பெருங்கடல் நீந்துவது அரிது. குரு, பரமாத்மாவை காட்டிக் கொடுக்கிறார். அவனை நம்மால் நேரே பற்ற முடியாது. அவனைப் பற்ற ஒரு பற்று வேண்டும். அவரே குரு (ஆச்சாரியன்). ஆவிக்கோர் பற்றுக் கொம்பு போல, அவருடைய அபிமானமே ஆன்மாவுக்கு உத்தாரகம். அருணகிரிநாதர், கந்தர் அனுபூதியில் முருகனை குருவாக வரச் சொல்கிறார்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

? இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் ஏதாவது விதிமுறைகள் இருக்கின்றதா?
– வேலாயுதம், புதுச்சேரி.

பதில்: இருக்கின்றன. ஆனால், சில குடும்பங்களில் சில வித்தியாசம் இருப்பதை அந்தந்த குடும்ப பெரியவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இருந்தாலும், கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் துக்கம் கேட்கப் போகும் போது, நாம் நம்மை அலங்கரித்துக் கொண்டு செல்லக் கூடாது. திருமேனி, அதாவது சரீரம் இருக்கும் பொழுது, அங்கே செல்பவர்கள் உடனே திரும்ப நேரிட்டால், கர்மா துவங்குவதற்கு முன்பே கிளம்பிவிட வேண்டும். இல்லை எனில் ரதம் கிளம்பிய பிறகுதான் திரும்ப வேண்டும்.

10 நாட்களுக்குள் ஒன்பதாவது நாள் தவிர, நாள் பார்க்காமல் எந்த நாளிலும், பொதுவாக துக்கம் விசாரிக்கலாம் என்று அபிப்பிராயம் உண்டு. இதில் பெரியவர்கள் சொன்ன இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இப்பொழுது மரியாதைக்காக நிறைய மாலைகளைக் கொண்டு போய் போடுகிறார்கள். அவற்றையெல்லாம் சாலை முழுதும் தரையில் வீசிக் கொண்டு செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட முறை முன்பு இல்லை. ஒரு 30,40 வருடங்களில் அதிகரித்திருக்கிறது. இம்மாலைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சக்கரங்களில் சிக்கி வீணாகிவிடுகிறது. கால்களில் மிதிபட்டு, சமயத்தில் இடறிவிடுகிறது. மாலைகளுக்கு பதிலாக வேறு வகையில் உதவலாமா என்று சிந்திக்க வேண்டும். மாலைகளுக்கான விலையை அவரை வணங்கி வைத்து விட்டுச் செல்லலாம். ஏழைகளுக்கு அது பெரும் உதவி.

சில குடும்பங்களில் அடக்கம் செய்யவே கடன் வாங்குகிறார்கள். வைணவத்தில் பிரேத சம்ஸ்காரம் விசேஷமானது. யாகாக் னியில் சமர்ப்பிப்பது போன்றது. சிலர் சந்தனகட்டைகளையும் (குச்சிகள்) கொஞ்சம் நெய்யும் கொண்டு போய் கொடுப்பது உண்டு.

? வாழ்வை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?
– சரண்யா ராகவ், திருச்சி.

பதில்: என்னோடு வாழ்ந்தவர்கள் என்னை எப்படிப் புரிந்து கொண்டார்கள் என்பதைவிட, எனக்குப் பின்னால் வரப்போகிறவர்கள், என்னை எப்படி மதிப்பிடப் போகிறார்கள் என்பதைப் பற்றியே அதிகம் கவலைப்பட வேண்டும். வாழ்வின் சிந்தனை எதிர்காலத்தைப் பற்றியது அல்ல. எதிர்காலத்தில் வாழ்பவர்களுக்கு நாம் செய்து வைத்திருக்கும் அல்லது வைக்கப்போகும் நிரந்தர நன்மை பற்றியதாகவே இருக்கவேண்டும்.

? எதனால் பகவானிடம் இருந்து விலகுகிறோம்?
– ரங்கநாதன், மடிப்பாக்கம்.

பதில்: மாயையால் பகவானிடமிருந்து விலகுகிறோம். மாயை, பந்தங்களை ஏற்படுத்துகிறது. அந்த பந்தங்கள், பகவானை விட்டு நம்மை விலகவைக்கிறது.

?ஆன்மிகத்தின் நோக்கம் என்ன, சொல்ல முடியுமா?
– குணவதி, மதுரை.

பதில்: இதே கேள்வியை குரு தன் சீடனிடம் கேட்டார். சீடன் பதில்சொன்னான்.
‘‘இறைவனை அறிவதுதான் ஆன்மிகத்தின் நோக்கம்.’’
‘‘அப்படியா?’’
‘‘என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள். அப்படித்தானே இருக்க முடியும்?’’

‘‘சரி… இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே… இறைவனை அறிந்தாயோ?’’
‘‘இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்…’’
‘‘நல்லது. உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?’’ சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.
‘‘கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.’’
‘‘எதனால் சந்தேகம் வருகிறது?’’

‘‘பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவைவிட குழப்பமே மிஞ்சுகிறது!’’
‘‘நல்லது. எப்போது நீ உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொண்டாயோ.. அதுவே நல்லது.சீடனே! இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். ஆண்டவனைத் தெரிந்து கொள்ள விரும்புகிறாயா!’’
‘‘ஆமாம். குருவே!”

‘‘உன் விருப்பத்தின் காரணமாகத் தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே!
‘‘ஆமாம் குருவே!’’‘‘அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் தெரிந்து கொள்வதற்கு ஓர் எளிமையான மாற்றுவழியைச் சொல்லித் தருகிறேன்!’’
‘‘மிகவும் சந்தோஷம் குருவே! இந்த வழிக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.’’

‘‘ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அறிய முடியாது. ஆனால், இறைவன் உன்னை அறிவான்!’’
‘‘இது குழப்பமாக இருக்கிறதே!’’‘‘ஒரு குழப்பமும் இல்லை. ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல! முடியவும் முடியாது.’’

‘‘ஆம்…’’
‘‘ஆனால், ராஜாவை அறிய வேண்டும் என்கிற பிரஜை ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான். அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது. உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார் அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். நடக்குமா?’’

‘‘நடக்கும் குருவே!’’

‘‘இப்போது, ராஜாவும் இவனைத் தெரிந்து கொண்டார். இவனும் ராஜாவைத் தெரிந்து கொண்டான். இப்போது ராஜாதான் இறைவன். நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் பார்ப்பது கஷ்டம். ஆனால், உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவான். எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு! சரிதானே!’’‘‘சரிதான் குருவே!’’

‘‘நல்லது சீடனே! இனி ஆன்மிகம் உனக்குப் பலிக்கும். போய் வா!’’

? ஒருவரை வழிநடத்திச் செல்லும் ஆயுதம் எது?
– செல்வி.லக்ஷ்மிஸ்ரீ, கோவை.

பதில்: ஒருவரை வழிநடத்திச் செல்வதற்கு ஒன்று அல்ல மூன்று ஆயுதங்களை நம்மிடம் பகவான் கொடுத்திருக்கிறார்.

1. தன்னம்பிக்கை.
2. அறிவு
3. துணிச்சல்

இந்த மூன்றும்தான் எப்போதும் ஒருவனைக் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும். மாபெரும் செயல்களை செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், இன்றியமையாத மூலப் பொருளான தன்னம்பிக்கை வேண்டும். அதற்கு அடுத்தது அறிவு. அப்புறம் துணிச்சல். இந்த மூன்றும் நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும் அது தடைகளையும் எதிர்ப்புகளையும் சமாளித்து விரட்டி வெற்றியைத் தரும். இந்தத் துணிச்சலைத் தருவது பகவானுடைய நாமம். அது எந்த சங்கடத்தையும் சமாளிக்க வைத்துவிடும். இதை கீழே உள்ள பாடல் தெளிவிக்கும்.

சொற்றுணை வேதியன்சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடிபொருந்தக்
கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர்கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவதுநமச்சி வாயவே.

? மனிதர்களின் கண்களில் பிறரின் தப்பு அதிகம் படுமா? நல்லது அதிகம்படுமா?
– விஸ்வநாதன், தஞ்சை.

பதில்: தவறுதான் அதிகம் படும். விளக்கெண்ணெய் வைத்து பார்ப்பார்கள். நல்லது செய்தால் கவனிக்காதது போல் இருப்பார்கள். ஒரு வார்த்தை பாராட்டிப் பேசுவதற்கு நேரம் இருக்காது. தப்பு செய்யும் பொழுது மட்டும் மணிக்கணக்காக அறிவுரை கூற ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு மட்டும் அவர்களுக்கு நேரம் கிடைத்துவிடுகிறது. பொதுவாக உலகியலில், ஒருவருடைய கண்ணீரை யாரும் கவனிப்பது இல்லை. துன்பங்களை யாரும் கவனிப்பதே கிடையாது.

வலிகளை யாரும் பொருட்படுத்துவதே கிடையாது. ஆனால், எல்லோரும் தவறுகளை கவனிக்கிறார்கள். ஆனால் ஆழ்வார் நமக்கு, “குற்றங்களை தள்ளுங்கள். நல்லவற்றை கவனித்து பாராட்டுங்கள்” என்று சொல்லுகின்றார். “குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும் இன்று முதலாக என் நெஞ்சே” என்று தன்னுடைய நெஞ்சுக்கு அவர் நல்ல வழியைக் காட்டுகின்றார். அது நமக்கும்தான்.

? நம் கவலைகளை பிறரிடம் சொல்லலாமா?
– வினோதினி, சென்னை.

பதில்: பிறர் என்பதில் வரையறை தேவை. கவலைகளை பிறரிடம் சொல்வதால் பாரம் குறைகிறது என்கிறார்கள். ஒரு சிலர் நல்ல தீர்வையும் சொல்லுகின்றார்கள். எனவே பிறரிடம் என்பது அது யாரிடம் சொல்கிறோம் என்பதைப் பொறுத்தது.

பெரும்பாலும் கவலைகளை பிறரிடம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. பாதிப்பேருக்கு அதில் சந்தோசம் இருக்கும். மீதிப்பேருக்கு அதில் அக்கறை எதுவும் இருக்காது.

? தவறு செய்யாமல் இருந்தாலும்கூட சிலர் மன்னிப்பு கேட்கிறார்களே?
– பாக்கியம், கரூர்.

பதில்: ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் மன்னிப்பு கேட்டாலே அவன் செய்தது தவறு என்றோ, அவன் யாரிடம் மன்னிப்பு கேட்கிறானோ அவன் செய்தது சரி என்றோ ஆகிவிடாது. உறவு கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் இருக்கலாம்.

The post தெளிவு பெறு ஓம்: ஏன் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Clarity Om ,Sundara Kanda ,Kunkum Anmigam ,Nitya ,Salem ,Sundara Kandham… ,Sundara Kandham ,
× RELATED சிற்பமும் சிறப்பும்