×

குமரியில் தொடரும் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சானி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு வாரமாகவே மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை கொட்டியது. இரண்டாவது நாளாக நாகர்கோவில், பார்வதிபுரம், சுசேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. தோவாளை, திட்டுவிளை, மணக்குடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை நீடித்தது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்மழையால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் திருப்பரப்பு அருவியில் தண்ணீர் அபாய அளவை தாண்டி கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. அருவிக்கு அருகே மக்கள் செல்வதை தவிர்க்க கயிறு கட்டி தடுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பு அணையிலும் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர் மழையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக 48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்தது. இதேபோல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 58 அடியை எட்டியது. இரு அணைக்கும் சுமார் 1500கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தலா 18 அடி உயரம் கொண்ட சிற்றார் ஒன்று மற்றும் இரண்டு அணைகளின் நீர்மட்டமும் 14 அடியை தாண்டியுள்ளது.

கனமழையின் காரணமாக சின்னமுட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம் ஆகிய மூன்று துறைமுகங்களை சேர்ந்த 900 விசைப்படகுகள், 6,000 நாடு படகுகள், 7000 கட்டுமரங்கள், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் குமரி மாவட்டத்தில் மட்டுமே 50,000 மேற்பட்ட மீனவர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர் மழையால் ஆரல்வாய்மொழி, தோவாளை, திட்டுவிளை, பகுதிகளில் செங்கல் சூளைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் செங்கல் உற்பத்தியும் முற்றிலும் முடங்கியுள்ளது.

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த செங்கற்களும் மழையில் நனைந்து வீணானது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவட்டாறு அடுத்து தோப்பு விளை கிராமத்தில் மின்சாரம் தாக்கி சித்ரா அவரது மகள் ஆதிரா, மகன் அஸ்வின் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்தவரிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும்உத்தரவிட்டுள்ளார்.

The post குமரியில் தொடரும் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Pachiparai ,Perunchani ,Kanyakumari ,Kanyakumari district ,Perunjani ,Tiruparappu ,Perunchani dams ,Dinakaran ,
× RELATED பேச்சிப்பாறையில் படகில் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள்