×

டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட திரிணாமுல் காங். தலைவர்கள் கைது… ஜனநாயகத்திற்கு ஒரு இருண்ட, மோசமான நாள்: மம்தா பானர்ஜி கண்டனம்

டெல்லி: டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களை காவல் துறையினர் தர தரவென இழுத்து சென்று கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்காக மேற்கு வங்கத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.15 கோடி உதவி தொகையை விடுவிக்க கோரி டெல்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடம் அருகே 2 நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கட்சியின் பொது செயலாளரும், மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து கிராம மேம்பாட்டு அமைச்சகம் அமைந்துள்ள இடத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். மேலும், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரை சந்திக்க அவர்கள் அனுமதி கேட்டனர். ஒன்றரை மணி நேரம் காத்திருந்தும் அனுமதி கிடைக்காததால் திரிணாமுல் காங்கிரஸார் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் நிலவியது. கலைந்து செல்லும் படி கூறியதை ஏற்காததால் அவர்கள் காவல் துறையினர் தர தரவென இழுத்து சென்று கைது செய்தனர்.

மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று பேருந்தில் ஏற்றினர். இந்த காணொளியை X பக்கத்தில் பதிவிட்டுள்ள மஹுவா, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு மக்களவை உறுப்பினர் எப்படி நடத்தப்படுகிறார் என்பதற்கு இது அவமானகரமான சாட்சி என்று கூறியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஜனநாயகத்திற்கு ஒரு இருண்ட, மோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். அமைதி போராட்டம் நடத்திய மக்கள் பிரதிநிதிகளை பாஜகவின் கரங்களாக செயல்படும் டெல்லி போலீஸ் சாதாரண குற்றவாளிகளை போல இழுத்து சென்றது வெட்கக்கேடானது எனவும் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்ட திரிணாமுல் காங். தலைவர்கள் கைது… ஜனநாயகத்திற்கு ஒரு இருண்ட, மோசமான நாள்: மம்தா பானர்ஜி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : TRINAMUL KONG ,TARNA ,DELHI ,MAMTA BANERJI ,Trinamul Congress party ,Trinamool Kong ,Mamata Banerjee ,
× RELATED “டெல்லி சலோ” பேரணி.. விவசாயிகள் மீது...